Sunday, September 30, 2007

தியாகி திலீபன்

திலீபன் என்றதுமே தித்திக்கும் என் மனது
சோகத்தையும் வென்றதொரு புல்லரிப்பு
என் இதயத்தில் எழுந்து வரும்
உலகத்தில் உன்னதமாய் ஓர் உயிர் பிரிந்ததென்றால்
அது அகிலத்தின் தியாகி அவன் திலீபன் இன்னுயிர் தான்
அகிம்சை என்றோர் ஆயுதத்தை கையிலெடுத்தான்
தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டான்


அன்னையர்கள் ஆறாத துயரத்தில்
தம் மார்பில் அடித்தே கதறி அழ
ஆண்களெல்லாம் தம் கண்களிலே
வழிகின்ற விழி நீரை துடைத்தெறிய
அருமைத் தம்பிகளும் அன்புத் தங்கைகளும்
பச்சிளம் குழந்தைகளும்
அண்ணா! அண்ணா! என்று அழுதிட்ட குரலோ
வானத்தை எட்டி நிற்க
தன் உயிரையும் உடலையும்
துடி துடிக்க தற்கொடையாக்கிவிட்டான்
திலீபனாய் நின்ற அவன் தியாகியாய் மாறிவிட்டான்


என்றும் அன்பான திலீபன்
எப்போதும் அகலாத புன்சிரிப்பு
மற்றவர்க்காய் மட்டும் வாழ்ந்த புனிதனவன்
எம்மவர்க்காய், எம் தமிழிற்காய், தமிழ் ஈழ மீட்பிற்காய்
தன்னையே ஈகின்ற கொடிய விரதமதை
திண்ணமதாய் செய்தே முடித்திட்டான்
தமிழர்க்கு விடுதலை வேண்டி அவன்
பெரும் தவமே செய்திட்டான்
விண்ணிலிருந்து பார்ப்பேன்
விடுதலையை என்றுரைத்தே
சென்றுவிட்டான் வெகுதூரம் எமை விட்டு


நவ இந்தியாவிடம்
நயமாய்க் கேட்டான் நீதியொன்றை
அகிம்சை சாத்வீகம் இவையல்லோ
ஆன்மீக இந்தியாவை இளக வைக்கும் என நினைத்தான்
"உன்னையே வருத்தி உணர்வுகளை அடக்கி
மாற்ற முயன்றாய் நீ அவர் மனதினையே"
வஞ்சகர்கள் நெஞ்சுக்குள் வரவில்லை இரக்கமது
எடுத்திட்டார் உன் இன்னுயிரை
வதைத்திட்டார் எம் தமிழினத்தை
தமிழ்நாட்டுத் தமிழரும் சேர்ந்தே கலங்கி நின்றார்
உன் நிலை கண்டு


காந்தி பிறந்த மண்ணில் தவறுதலாய்ப் பிறந்தவர்கள்
இங்கு தமிழீழத்தில் காந்தீயம் சாவதற்கு
அடிப்படையாய் இருந்திட்டார்
கல்லுக்குள் ஈரமுண்டு கண்டிடலாம் சில வேளை
இந்தக் கயவர் நெஞ்சுக்குள்
கடுகளவும் ஈரமில்லை
வெறி பிடித்த இந்திய ராணுவமே
வெறும் ஆயுதத்தை மட்டுமா ஒப்படைத்தார்
தமிழர் படை உன்னிடத்தில்
எம் மக்கள் உயிரையுமே ஒப்படைத்தார் உனை நம்பி
புத்தரின் புனிதர்கள் கொடியவர் என்பதனால்
காந்தியின் புதல்வர்கள் என்றல்லோ
எண்ணி உமை நாம் நம்பிட்டோம்
துரோகியாய் நீர் இருக்க
தூய நண்பனாய் உனை நினத்தோம்
அபயம் அளிக்க நீர் வருவதாய்
ஆவலுடன் எதிர்பார்த்தோம்
அன்புடன் உமை வரவேற்றோம்
ஆறுதல் தருவாய் நீ எனவே
அக மிக மகிழ்ந்திட்டோம்



பிராந்திய வல்லரசாய் உன் வன்மத்தைக் காட்ட நீ
தெரிவு செய்திட்டாய் ஈழ தேசமதை
உண்ணா நோன்பிருந்தே உம் உள்ளமதை
மாற்ற அவன் முயன்றே தோற்றிட்டான்
தமிழன் உரிமை ஒன்றும் உன் தயவால் கிட்டாது
என்றே உணர்ந்தான் எம் திலீபன்
பூண்டான் கொடிய விரதம் அவன்
நல்லூர்க் கந்தன் வீதியிலே
உணவின்றி நீரின்றி தன் நாக் காய்ந்து
உடலில் உரமின்றி நிற்கத் தயவுமின்றி
மரணத்தை நோக்கி அவன் மகிழ்வுடன் போகையிலும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
தமிழீழம் மலரட்டும்!
என்றே எமக்குரைத்தான்
விழிப்பாய் இருங்கள்! விழிப்பாய் இருங்கள்! என
எமை விழித்தே சொன்னான் பல தடவை


பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
பொறுக்கிகள் செய்த அநியாயம் பொறுக்குதில்லையே
பொன்னான எங்கள் தங்கத் திலீபன்
தன் உயிரையே விலை கொடுத்த கொடுமைதனை
நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே
கல்மனம் கொண்ட இந்திய ராணுவமே
கடுகளவும் இல்லையா கருணை உனக்கு
தாய் நாட்டுக்காரர் தருமம் அறிந்தவர்கள்
என்றேதான் நம்பிட்டோம் நாமெல்லாம்
பொல்லாத பாவிகள்
எம் மண்ணை அழித்திட்டார்
நல்ல பண்பை அழித்திட்டார்
எம் பெண்கள் கற்ப்பைப் பறித்திட்டார்
எம் திலீபன் உயிரையும் எடுத்திட்டார்


காந்தியைக் கொல்ல ஒரு கோட்சே
இங்கு எம் திலீபனைச் சாகடிக்க
ஓராயிரம் கோட்சேக்கள்
வெட்கமாயில்லை உங்களுக்கு
காந்தி உயிருடன் இன்றிருந்தால்
உம் செயல் கண்டு தன்னையே மாய்த்திருப்பார்
அன்றே உயிர் நீத்ததனால்
இன்று தப்பிப் பிழைத்துவிட்டார்


நல்லூர்க் கந்தா நான் உனைக் கேட்கின்றேன்
இது நியாயமா சொல்லுமையா
தமிழ்க் கடவுள் நீ என்றால்
தமிழர்க்காய் எம் திலீபன் உயிர் காக்க
ஏன் மறந்தாய் சொல்லுமையா


தமிழர்கள் வாழ்விற்காய்
ஈழ தேசத்தின் விடிவிற்காய்
உன் உடலை வருத்தியே
உயிர் துறந்தாய் திலீபா
மறவாது தமிழ் உலகம் உன்னை
இந்த மாநிலத்தில் தமிழ் மனிதன் உள்ளவரை