Tuesday, February 26, 2008

ஏன் இந்த வேதனை?

மனத்துள்ளே ஓர் ஆயிரம் சுமைகள்
இதயத்தின் பாரத்தை இன்னும் அதிகமாக்கி
அளவில்லா வேதனையைத் தருகிறது
என் உள்ளே!
ஏன் இந்த வேதனை? எனக்கேன் இந்த வேதனை?
கேட்டுவிட்டேன் இந்தக் கேள்விதனை
ஒர் ஆயிரம் முறை
விடை காண முயன்று முயன்றே
தோற்றுவிட்டேன் நானும் இன்றளவும்

இதயம் அழுகிறதே! மனம் துடிக்கிறதே!
உடலில் ஓர் துன்பமில்லை
ஆனால் உள்ளத்தில்
உயிர் போவதுபோல் ஓர் வேதனை
காரணத்தைத் தேடினேன்! தேடினேன்!
இப்போதான் புரிந்து கொண்டேன்
உன்னிடம் தந்த என் இதயத்தை
உடைத்து நொருக்கி விட்டு
தந்துவிட்டாய் மீண்டும் என்னிடமே
திருத்த முடியா என் இதயத்தை
திருத்துவதற்காய் அலைந்தேன்
முடியுமட்டும்
புரிந்து கொண்டேன் இப்போது
உன்னிடம் மாத்திரமே உண்டு
என் உள்ளத்தின் நோய் தீர்க்கும்
அருமருந்து
தருவாயா? என் அருகே வருவாயா?

Saturday, February 23, 2008

மனைவியும் நாயும்

அன்று அவன் வாழ்வு
எல்லாமே இனிமைதான்
வாழ்வின் வசந்தத்தை
மேலாக அனுபவித்தான்
அன்பான மனைவியும்
நன்றியுள்ள நாயும்
அவனிடம் இருந்ததனால்
குறைவில்லா உல்லாசம்
கூதுகலமான இல்வாழ்க்கை
நன்றி சொல்வான் என்நாளும்
ஆண்டவனுக்கே
இவ் வாழ்வை அளித்ததற்காய்

களைப்புடன்
வேலையால் வரும்போது
அன்பு மனைவியவள்
கொடுத்திடுவாள்
இனிய முத்தமொன்று
நன்றியுள்ள நாயோ
குரைத்தே
தன் மகிழ்ச்சியினை
சொல்லி நிற்கும்
அவனுக்கோ
களைப்பெல்லாம் தீர்ந்து போகும்
உற்சாகம் பொங்கி வரும்

இன்றும்.............
அவன் வேலையால் வரும்போது
முத்தமும் கிடைக்கிறது
குரைத்தலும் நடக்கிறது
ஒரே ஒரு மாற்றம்
மனைவி இப்போ குரைக்கின்றாள்
நாயோ அன்பாய்
தன் நாவினால் நக்கி
முத்தம் கொடுக்கிறது

காலம் செய்த கோலம்
பத்து வருடம் போனதினால்
மனைவி அவள் மாறிவிட்டாள்
கடுகடுப்பாய் குரைக்கின்றாள்
நாயும் மாறியது
பத்து வருடம் போட்ட உணவிற்காய்
நன்றியுடன் முத்தம் இடுகிறது
மனிதர்களே நாய்களையும்
கெடுத்து விடாதீர்
அவன் மனமொடிந்து போய்விடுவான்.

Thursday, February 21, 2008

புலம்பெயர் வாழ்வு

நாட்டிலே நடந்தவைகள்
மனதை வதைத்ததனால்
புலம் பெயர்ந்தோம் நாம் எல்லாம்
நாம் உண்டு நம் வேலை உண்டு
என்றிருந்தோம் மகிழ்வாக
வேலையைப் பறித்தீர்
மாவட்ட அடிப்படை என்றே
கல்வியைப் பறித்தீர்
தரப்படுத்தல் என்றே
எம்மவர் வர்த்தகத்தைப் பறித்தீர்
இனக் கலவரம் செய்தே
பொறுமையாய் இருந்தவர்
போர்க் கொடி உயர்த்தினர்
மரணம் என்பது
மலிவாய்ப் போனது நம் மண்ணில்
வந்தோம் நாமும் புலம்பெயர்ந்தே
வழமான வாழ்வு வாழ்வதற்கே!

கூட்டல் பெருக்கல் படிப்பித்த
கந்தசாமி மாஸ்ரர்
இங்கே கூட்டிப் பெருக்கும்
வேலையிலை குளிருக்கை நிற்கிறார்
வைத்தியராய் வேலைபார்த்த
வைரமுத்து இங்கே
இறைச்சிக் கடையில்
வெட்டுகிறார் ஆட்டு இறைச்சியினை
துண்டு துண்டாய்
எக்கவுண்டர் ஏகாம்பரம்
எண்ணி எண்ணிக் கழுவுகிறார்
கோப்பைகளை றெஸ்ரோறன்ரிலே
இவர்களுக்கெல்லாம்
நாட்டிலே வேலைசெய்த நேரங்கள்
நினைவில் வர
அழுகை தானாக ஓடிவரும்

கிரைண்டரும் மிக்சியும்
கேட்ட பெண்களெல்லாம்
இங்கே
அம்மியும் ஆட்டுக்கல்லும்
உரலும் உலக்கையும்
வேணுமெண்டு அடம்பிடிக்கின்றார்
சமையல் செய்வதற்கு
தலையில் கைவைத்தே
செய்திடுவார் ஆண்களெல்லாம்
சமையலையே
நாட்டிலை நாம் இருந்த வேளை
கரட், லீக்ஸ்
மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு
கேட்டார்கள் பெண்களெல்லாம்
இங்கே
முருங்கை இலை வாழைப் பொத்தி
ஊர்க் கீரை, மரவள்ளிக் கிழங்கு
எல்லாம் வேணுமாம்
சமையல் செய்வதற்கு
எல்லாமே பிரச்சனை தான்
புலம் பெயர் நாட்டினிலே

போதும் இந்தப்
புலம்பெயர் வாழ்வு
எப்போ பெறுவோம்
நாம் சுதந்திரத்தை
அப்போ மீண்டும் பெயர்வோம்
ஈழத்திற்கே!!

Sunday, February 10, 2008

தாங்குமா என் இதயம்?

வானத்தே வட்டமிடும்
பொல்லாத கழுகுகளாய்
கோளிக்குஞ்சுகளை
கொன்று தின்னவென்று
துடிக்கும் வல்லூறுகளாய்
கிபீர் விமானங்கள்
எம் மண்ணின் வானத்தின் மீதே
பறந்து வட்டமிடுகிறது
பயமும் பீதியும் நடுக்கமும்
ஒன்று சேர பதறிப் போய்
பிள்ளைகள் அம்மாவை
அரவணைக்கும் வேளை
அந்த அன்னையின் வேதனை
கண்களில் கண்ணீராய்
உள்ளத்தில் நெருப்பாய்
சொல்லில் வடிக்கமுடியா உணர்வுகளாய்
கதறலாய் வெளிப்படும் வேளை
என் இதயம் வெடிக்கிறது
தாங்குமா என் இதயம்?

இவை கொட்டுகின்ற குண்டுகளால்
சிதறி சின்னாபின்னமாகின்ற
கட்டிடங்கள் வீடுகள்
நாம் வாழ்ந்த வளர்ந்த
புனித இடங்கள் அவை
அதன் நடுவே
குற்றுயிராய் உயிருக்காய்
போராடும் குழந்தைகள்
தண்ணீர் தண்ணீர் என்று
கதறி அழ
உதவக் கூட முடியாமல்
காலைத் தொலைத்துவிட்ட
அக் குழந்தைகளின் பெற்றோர்கள்
ஆபத்துக்கு உதவ வந்த
அம்புலன்ஸ் வாகனங்கள்
ஆமிக்காரனைத் தாண்டி
ஆஸ்பத்திரிக்குப் போக ஏலாதாம்
என்ன கொடுமை இது
தாங்குமா என் இதயம்?

எமது வீதி எங்கும்
குருதி வெள்ளம்
உயிரில்லா உடலங்கள்
நாள் தோறும்
நம் கண் முன்னால்
வெள்ளை வானிலே
வருகின்ற யம தூதர்கள்
எருமை வாகனத்தை
வெள்ளை வானாக்கி
எம்மவரை மேலோகம்
கொண்டு செல்லும் பாதகங்கள்
கடத்தலும் கப்பம் வேண்டுதலும்
சுடுதலும் சுட்டுப் பொசுக்குவதும்
எம் மக்கள் வாழ்வின்
நித்திய வழமையாய்
ஆகிப் போனதை
தாங்குமா என் இதயம்?

புலம் பெயர் நாட்டில்
புகலிடம் தேடியதால்
என் நெஞ்சத்தின் சுமை
ஒன்றும் குறையவில்லை
நாள் தோறும்
கேட்கின்ற செய்திகளால்
என் மனம் இடிந்தே போகிறது
ஒவ்வோர் செய்தியும்
ஒவ்வோர் பாறாங்கல்லாய்
என் இதயத்தை
இறுக்கி அடிக்கிறது
தாங்குமா என் இதயம்?

மனத்தில் ஓர் சோகம்
என்னவென்றே புரியாத புதிராக
நான் பிறந்த மண்ணை
பிரிந்து வந்ததனால்
ஏற்பட்ட வேதனையோ?
இல்லை......
நம் மண்ணில் எம் மக்கள்
படுகின்ற துயரங்கள்
தருகின்ற வேதனையோ?
கண்களில் வழியும் விழி நீரை
துடைத்தேன் நானும் கையாலே
சிவப்பு நிறத்தில்
உதிரம் கொட்டியது விழி அதனில்
இதயத்தின் உடைவுகளின்
குருதி இதுவென்றே
உணர்ந்து கொண்டேன்.

Saturday, February 2, 2008

புளிப்பும் இனிப்பும்

களவாகக் கல்லால் அடித்து சுவைத்துச் சாப்பிட்ட
புளி மாங்காய் நன்றாய் இனித்தது அன்று
பார்த்துப் பார்த்து கடையில் வாங்கிய
கனிந்த மாங்காய் சரியாய் புளிக்குது இன்று
புளிப்பும் இனிப்பும் மனத்தில் இருக்கும்.