தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை
சரியான சனக்கூட்டம்
இளையவர் பெரியவர் இளந்தாரிப் பெடியன்கள்
எல்லோரும் இங்கு சரிசமன் தான்
சமத்துவம் என்பது
சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான்
தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள
தடுத்திடுவார் சிலபேரை முத்தண்ணை
தடுத்த அந்தச் சில பேரிடமே
கையேந்திக் கள்ளுக் குடிப்பார் அந்தண்ணை
பகுத்தறிவென்பது கள்ளிலிருந்துதானோ பிறக்கிறது
ஆண்கள் மட்டும்தான்
இங்கே அனுமதிக்கப் படுவதனால்
எல்லோரும் இங்கே மன்னர் தான்
ராணி இல்லாத ராயாக்கள்
இவர்கள் பாடு கொன்டாட்டம் தான் இங்கு
வீட்டில் வாயே திறக்காத முத்தண்ணை
இங்கே வந்துவிட்டால் முழுநேரப் பேச்சாளர்
அரசியலில் இருந்து தன் வீட்டு அந்தரங்கம் வரை
அவிட்டு விடுவார் அருமையாக முத்தண்ணை
கேட்போரெல்லாம் மெய்மறந்து
சொக்கித்துப் போய்விடுவார்
வீட்டிலே மனிசிக்குப் பயந்த முத்தண்ணை
கள்ளைக் கொஞ்சம் அடித்ததுமே
முழு வீரனாய் மாறிடுவார்
இண்டைக்கு வீட்டை போய்
அவளின்ரை வாயை அடக்கிறேன் பார் என்பார்
ஊத்தடா இன்னொண்டு என்று சொல்லி
அவர் குடிக்கும் அழகே ஓர் தனி அழகு
அக்கம் பக்கத்தார் ஆரேனும் இருக்கினமா
ஆழ்ந்து பார்த்துத்தான்
வீராப்புப் பேசிடுவார் முத்தண்ணை
அரசியல் விவாதமெல்லாம் இங்கேதான்
அக்கு வேறு ஆணி வேறாய் அலசி ஆராய்வார்
அமெரிக்காவில் ஆட்சியை மாற்றக் கூட
இங்கே திட்டங்கள் தீட்டிடுவார்
கள்ளுக்கொட்டிலிலே அரசியல் பேசிய முத்தண்ணை
பெற்றதோ அரசாங்கத்தில் மந்திரிப் பதவி
அனைத்தின் வளர்ச்சிக்கும்
கள்ளுக் கொட்டில்தான் ஆதாரம்
என்பதே அவரின் வாதம்
Five Star Hotel இலை விஸ்க்கி குடித்தாலும்
பிளாவிலே கள்ளை எடுத்து
குவிந்திருக்கும் எறும்பு பூச்சிகளை
அலாக்காக தட்டி எறிந்து விட்டு
அதை உறிஞ்சிக் குடிக்கும் இன்பம்
எங்கே வருமென்பார் முத்தண்ணை
கலம்பிலும் காமட்சி கள்ளுக் கடையை
திறந்து வைத்தே புகழ் ஏணியின்
உச்சிக்கே போய் விட்டார் இந்தண்ணை
சுவீடனுக்கு வந்த அண்ணர்
கள்ளுக் கொட்டிலைக் காணாது
கலங்கியே போய்விட்டார்
கடைசிக் காலத்தில் கள்ளில்லாமல்
காலம் தள்ளுவதெப்படி என்றே
சோர்ந்துவிட்ட முத்தண்ணைக்கு
கனடாவில் கள்ளுக் கடை திறந்த செய்தி
இன்பத்தை அளித்திடவே
அங்கே மாற்றிவிட்டார் தம் இருப்பிடத்தை
"கள்ளில்லா வாழ்வு பாழ்
கள்ளுக் கொட்டில் இல்லாத நாடு பாழ்"
இதுவே முத்தண்ணையின் தத்துவம்.
No comments:
Post a Comment