Monday, September 17, 2007

வாழத்தெரிந்தவன்

வாழத்தெரிந்தவன் வாயாடி வயிரமுத்து
அவன் படித்ததோ பாலர் வகுப்பு
ஆனால் கதைப்பதோ
பல்கலைக்கழக தேர்வு பற்றி
அன்பாக கதைப்பதிலே
அவனை மிஞ்ச யாருமில்லை
அலுவல் முடிந்தபின்
ஆரோபோல் அவன் போவதே ஓர் தனி அழகு

வேலைக்குப் போகிறவர் எல்லாம்
வெறும் முட்டாள்கள் என்றிடுவான்
ஐரோப்பாவில் வேலை தேடியது
அவன் எப்போதும் இல்லை
அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு
அறவே இல்லை
நாய்க்கு வேலையும் இல்லை
நடக்க நேரமும் இல்லை
வாயாடி வயிரமுத்துவிற்க்கு
எதற்குமே நேரம் இல்லை
ஓடி ஓடி அவன் அங்கும் இங்கும் திரிவதும்
அண்ணை நேரம் இல்லை
அக்கா பிறகு சந்திப்போம் என்று சொல்வதும்
எவரையும் இலகுவில் நெகிழ வைக்கும்
பாவம் வயிரமுத்து பஞ்சாப் பறக்கின்றார்
சொல்பவர்கள் ஏராளம் ஏராளம்
இப்படியும் வாழ்வா
என்று எண்ணத் தோன்றும் பலருக்கு

அரசாங்கத்தில் பெறுவதோ உதவிப் பணம்
ஆனால் கட்டுவதோ கணக்கில்லாச் சீட்டுக்கள்
வயிரமுத்துவிற்கு இதுவெல்லாம் வலு சிம்பிள்
கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்
கடன் பெற்றால் இவரிற்கோ
நெஞ்சமெல்லாம் அஸ்கிறீமாய் குளிர்ந்துவிடும்
காசிருந்தால் கை கால் ஒன்றும் சும்மா கிடவாது
வெளிக்கிடுவார் சுற்றுலா வெளிநாட்டிற்கு
ஏன் போறான் எதுக்குப் போறான்
அவனுக்கே தெரியாது இதுவெல்லாம்
வெளிநாடு போவதென்றால்
ஏகக் குசி பட்டிடுவான்
வாங்கிடுவான் பொருட்களெல்லாம் வகை வகையாய்
புறப்படுவான் மிடுக்குடனே பளபளப்பாய்

தன் வீட்டுப் பிரச்சனையோ ஆயிரம் ஆயிரம்
அடிதடிகள் கூட அங்கு தாராளம் ஆனாலும்
அக்கம் பக்கத்தார் வீட்டுப் பிரச்சனையில்
வக்கீலாய் மாறி பிரச்சனையைத் தீர்த்து வைப்பான்
தாயும் தந்தையும் தாய் நாட்டில்
தவியாய்த் தவிக்கின்றார்
இருப்பதற்கு இருந்த குடிலும்
இப்போ மழையைத் தாங்காதாம்
இங்கோ வயிரமுத்து அள்ளிப் போட்டிடுவான்
நகை நகையாய் அலுக்காமல்
மனைவிக்கும் அணிவிப்பான் அளவுக்கு மேலாலே

அவரின் பொன்மொழிகள்
இல்லை வாய்மொழிகள்
கேட்டாலே புல்லரிக்கும்
"கடன் பட்டென்றாலும் கட்டு கல்யாணம்"
"கத்துகிறவன் எவனோ அவனே அறிவாழி"
இதுதான் அவனின் தாரக மந்திரம்
வாழத் தெரிந்தவன் வயிரமுத்து!!

No comments: