Monday, January 28, 2008

ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு!

அடுக்கடுக்காய் வந்த அகதிச் செய்திகளை
கேட்டபின் என் பேனாவைத் தொட்டதனால்
விளைந்ததுதான்
என் இதயத்தில் இருந்து எழுந்து வரும் இக் கவிதை
அகதிகளாய் வருகின்ற
என் அருமை தம்பிகளே தங்கைகளே
உங்களின் வருகையினை
வரவேற்க என்னால் முடியவில்லை
ஏன் என்றால் உங்கள் வருகை
சாவிற்கும் வாழ்க்கைக்கும் இடைப்பட்டே இருக்கிறது
நீங்கள் சாவுடன் மோதி கவிழ்கின்ற கப்பலிலும்
மூட்டை ஏற்றும் கொன்ரெயினரிலும்
மூச்சு விடமுடியாது
இறக்கின்ற செய்திகளை கேட்கும்போது
எப்படி உங்கள் வருகையை நான் வரவேற்பேன்

இத்தாலிக் கடற்கரையில்
கப்பலில் கவிழ்ந்தவன் தமிழன்
இந்தோனேசியாவில் இன்றும்
அடைபட்டுக் கிடப்பவன் தமிழன்
அவுஸ்திரேலியாக் கடற்பரப்பில்
அவலப்படுபவன் தமிழன்
துருக்கிச் சிறைகளில்
வாடி வதங்குபவனும் தமிழன்
ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு
ஐயா! ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு!

வாயாரச் சாப்பிட்டு சீராக இருந்தவன் தான் தமிழன்
கலையிலும் கலாச்சாரத்திலும்
வெள்ளையனை விஞ்சியவன் தமிழன்
தன்மானம் உள்ளவன் தான் தமிழன்
தரணியெங்கும் புகழ் கொண்டவன் தான் தமிழன்
இன்றோ ஐரோப்பிய நாடெல்லாம் அகதிகளாய்
அல்லல் படலாமா தமிழன்?
சுதந்திரம் கேட்பதெல்லாம்
சுயநிர்ணய உரிமையுடன் வாழ வழி கேட்பதெல்லாம்
இவ்வுலகில் ஓர் கிரிமினல் குற்றமா?
நம் பெண்களெல்லாம் தம் கற்பை
காப்பதெல்லாம் ஓர் பாவமா?
நம் மழலைகளை
மாற்றானின் துப்பாக்கிச் சன்னங்கள் துளைக்காமல்
பாதுகாப்பதுவும் ஓர் கொடுமையா?
அன்னையை தந்தையை அடிக்கவரும் ஆமிக்காரனை
எதிர்ப்பதுவும் ஓர் இகழ்ச்சியா?

ஐ நா என்கின்றீர்
உலகத்தின் அவலம் எல்லாம்
தீர்ப்பவர் நீர்தான் என்கின்றீர்
ஐரோப்பிய நாடுகள் எல்லாம்
தார்மீகத்தின் தந்தைகளாம்
அமெரிக்காவே அன்புடன்
அகிலத்தையும் ஆட்சி செய்கிறதாம்
அல்லல் படும் தமிழினத்தை அரவணைக்க
உங்களுக்கெல்லாம் ஏன் ஓர் மனம் வரவில்லை
அகதிகளாய் நாம் இன்று ஓடி வருவதற்கு
அத்திவாரம் இட்டவர் நீங்கள் தானே?
இன்று எம்மை சீறுகின்ற சிங்களத்தின் கைகளுக்கே
திருப்பி அனுப்பத் துடியாய்த் துடிக்கின்றீர்
அகதி என்று நாம் வருவதனால்
எம்மை நீர் எள்ளி நகையாடலாமா?

எமக்கென்று ஓர் நாடுண்டு
அதற்கென்று ஓர் கலை உண்டு
கலாச்சாரம் உண்டு மொழி உண்டு
எல்லாமே எமக்குண்டு
மாற்றானின் அதிகாரம் நம் மண்ணில் பதிந்ததனால்
நாம் இன்று அகதி ஆனோம்
அகதிகளை ஆக்குபவர்கள் நீங்கள் ஐயா
ஆயுதம் விற்பதுவும் நீங்கள் ஐயா
சண்டைகளை மூட்டிவிட்டு
சமாதானம் செய்பவரும் நீங்கள் ஐயா
எங்களை எட்டி உதைக்க
உமக்கொன்றும் உரிமையில்லை
நமக்கென்று ஓர் நாடு வேண்டும்
வாழ்வதற்கு நமக்கு ஓர் உரிமை வேண்டும்
உரிமையை வென்றெடுக்க
உயிரையும் கொடுப்பவன் தமிழன்
தம் உயிர் காக்க தம் மழலைகளின் பயம் போக்க
அகதிகளாய் இன்று
அலை மோதி அழிகின்ற நிகழ்வுகளை
எப்படி நாம் வரவேற்போம்!

சுடுகாடாய் தமிழ் ஈழத்தை
சுட்டெரிக்கத் துடிக்கின்றான்
சிங்கள இன வெறியன்
அகதியாய் வருபவனை
அணைப்பதற்கு மறுக்கின்றான்
ஆணவம் கொண்ட ஐரோப்பியன்
அகதியாய் வரும் உன்னை
எப்படி நாம் வரவேற்போம்?

Saturday, January 26, 2008

எப்படி எழுந்து வரும்?

சோகத்தில் மனது எழுதும் பல கவிதை
கோபத்தில் உணர்வு சொல்லும் சில கவிதை
காதல் மோகத்தில் கதை பேசும் ஓர் ஆயிரம் கவிதை
விடுதலை வேட்கையிலே பிறக்கும் வீர காவியக் கவிதை
மட்டற்ற மகிழ்ச்சியிலே பொங்கி வரும் இனிய கவிதை
எனக்கு மட்டும் ஏன் எழுத வரவில்லை ஓர் கவிதை
உணர்வுகள் அற்ற வெறுமையாய் எனது மனம்
எப்படி எழுந்து வரும் கவிதைகள் என்னுள்ளே!!

Thursday, January 24, 2008

அடிப்பேன் அடுத்த முறை நிட்சயமாய்

என்னவளே அழவேண்டாம்
உன்னை நான் அடித்ததற்காய்
அணைக்கும் என் கரங்கள்
அடிக்கவும் செய்கிறது
ஏன் என்று புரிகிறதா என்னவளே?
உன் மேல் கொண்ட அளவில்லா அன்பினால்தான்
ஆத்திரம் வருகிறது சிலவேளை
நீ இல்லாமல் எனக்கோர் வாழ்வில்லை
அறிவாய் நீயும் நிதர்சனமாய்
உன் கையால் பரிமாறும்
நீ சமைத்த உணவை நான் உண்டு
உனக்காகவே வாழ்கின்றேன் இவ்வுலகில்
உண்மை புரியும் உனக்கு
உன்னில் எனக்கு உரிமை உண்டென்றே
அடித்தேன் நானும் சில வேளை
இது உனக்குப் பிழையென்றால்
சொல்லிவிடு இப்போதே!

அழவில்லை நீர் என்னை அடித்ததற்காய்
உம் அன்பு புரிகிறது நல்லாவே
எனக்கும் உம்மேல் தீராத அன்புண்டு
என்றே உணர்த்த நானும்
அடிப்பேன் அடுத்த முறை நிட்சயமாய்
புரிந்து கொள்ளும் என்னவரே!!

Monday, January 21, 2008

அவனைத் தேடுகிறேன்

அவனைத் தேடுகிறேன்
எல்லா இடங்களிலும்
களைத்து ஓய்ந்து விட்டேன்
காணவில்லை எவ்விடமும்
எங்கே அவன்?
எப்படித் தொலைந்தான் அவன்?
அழுத கண்களுடன் கேட்டேன்
அவன் அம்மாவை
கண்டீர்களா அவனை?
கலங்கிய கண்களுடன் சொன்னார்
இல்லை என்றே!
அங்கும் இங்கும் ஓடி ஓடி
தேடினேன் அலுக்காமல்
ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது எனக்கு
கேட்டேன் அவன் மனைவியிடம்
கண்டீர்களா அவனை?
அழுகையும் சோகமும் ஒன்று சேர
சொன்னாள் அவளும்
அதே பதில்தனையே
வருவோர் போவோர் அனைவரையும்
கேட்டே அலுத்து விட்டேன்
நானாக அவனைக் கண்டுபிடிக்க
சபதம் எடுத்தேன் முடிவாக...

பழைய நினைவுகள்
புதிதாய் எழுந்து வர
மீட்டேன் என் நினைவுகளை
அன்று......
அவனும் நானும் இனிய நண்பர்கள்
துடிப்புள்ள இளையனாய் அவன் இருந்தான்
துன்பம் வந்ததென்று யார் சொன்னாலும்
துயர் துடைக்கப் புறப்படுவான் உடனேயே
துஸ்டரைக் கண்டால்
எட்டி உதைத்திடுவான் காலாலே
அநியாயம் செய்பவரை
அஞ்சாமல் கேட்டிடுவான்
இதுவென்ன நியாயமென்று
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரை
உரக்கப் பேசியே விரட்டி அடித்திடுவான்
பெரியோரை மதித்திடுவான்
சிறியோரை அணைத்திடுவான்
நல்லவரைப் போற்றிடுவான்
நயவஞ்சகம் செய்வோரை நையப் புடைத்திடுவான்
இருப்பதே போதுமென்று
ஆண்டவன் கொடுத்ததே அதிகமென்று
அகமகிழ்ந்து வாழ்ந்திருந்தான்
நண்பர்கள் எல்லோர்க்கும்
அவன் நல்லதோர் வழிகாட்டி
உயிரையும் கொடுக்கத் துணிந்திடுவான்
தன் நண்பரைக் காப்பதற்காய்
அவன் அன்று வாழ்ந்த வாழ்க்கை அது....

இன்று....
இவற்றையெல்லாம் எங்கோ தொலைத்துவிட்டு
இருக்கின்றான் இதயமில்லா மனிதனாய்
மற்றவரின் துன்பத்தில்
குளிர்கிறது அவன் மனது
அடுத்தவரின் இன்பத்தில்
எரிகிறது அவன் வயிறு
அநியாயம் செய்பவரைக் கண்டால்
அலாக்காகத் தட்டிக் கொடுத்திடுவான்
மற்றவரின் சுகம் கண்டு
புழுங்கிடுவான் தன் மனத்துள்ளே
நாசமாய்ப் போகவேண்டும் இவனென்று
மனத்துள்ளே வேண்டிடுவான் ஆண்டவனை
கூடியிருந்தே கழுத்தறுப்பான் கூதுகலமாய்
நல்லவனாய் நண்பனாய் நடித்தே
செய்திடுவான் நம்பிக்கைத் துரோகமதை
உதவிகள் பெறுமட்டும்
நடிப்பான் உத்தமன் போல் நல்லாக
பின் சொல்லால் அடித்தே
கொன்றிடுவான் அவர் தம் இதயமதை
எல்லாம் இருந்தும்
ஆற்றாமை மேலோங்க
இன்னும் வேண்டும் என்றே
நொந்திடுவான் ஆண்டவனை

என்ன ஆயிற்று அவன் மனத்திற்கு
ஏன் ஆனான் இப்படியாய்
அவன் உள்ளம் தொலைந்ததனால்
உற்றோரும் மற்றோரும் தேடுகிறார்
என்போல்....அவனை எந்நாளும்
புரிந்து கொண்டேன் இப்போது
நான் தேடியது அவன் உடலையல்ல
அவன் உள்ளத்தை
தொலைத்துவிட்ட அவன் உள்ளத்தை
உணர்வுகளை அவன் மீளப் பெறுவதற்காய்
முயன்றிடுவேன் இப்போதே
அவனைக் கண்டுகொள்வேன் அவனுள்ளே
அன்றிருந்தபடியே.........

Friday, January 18, 2008

கேணல் கிட்டு

இழந்த எம் யாழ் மண்ணை மீட்டெடுத்து
சங்கிலியன் தவற விட்ட எம் ராச்சியத்தை
மீண்டும் சரித்திரமாக்கிய வீரனே
மறைந்தாய் நீ எம் மண்ணை விட்டு
ஆனாலும் மறையவில்லை நீ எம் மனதை விட்டு
உணர்ந்து கொள்வாய் உத்தமனே!
எம்மவர்க்கு உயிர் பெரிதல்ல
தமிழ் மானமே பெரிதென்று
அகிம்சை போதித்த அந்த வஞ்சகற்க்கு
ஆணித்தரமாய் உரைப்பதற்க்காய்
நீ கொடுத்த விலை
எண்ண எம் நெஞ்செல்லாம்
தீப் பிழம்பாய் கொதிக்கிறது
அன்று துவண்டு போன
தமிழர் மனமெல்லாம்
இன்னும் தவியாய்த் தவிக்கிறது
இழப்புக்களே எம் தலை விதியோ
என்று ஏங்கித் தவிக்கிறது!

கிட்டர் என்ற பெயர் கேட்டதுமே
கிடுகிடுத்து ஓடி ஒழித்திட்ட
சிங்கள ராணுவச் சிப்பாய்கள்
இன்று எம் யாழ் மண்ணில்
செய்கின்ற கொடுமைகளை
சொல்வதற்கே என் நெஞ்சு மறுக்கிறது
உண்ண உணவில்லை
உடுப்பதற்கு உடையும் இல்லை
பால்குடி மாறாப் பச்சிளம் குழந்தைகள்
பசி ஆற ஒன்றுமே அங்கில்லை
தள்ளாத வயோதிபர்கள்
வயதான பெரியோர்கள்
வாங்க ஓர் மருந்துமின்றி
வாடி வதைந்து மரணிக்கும் காட்சி
எல்லாமே
எம் இதயத்தை வெடிக்க வைக்கிறது
வானத்தே நின்று எம் கிட்டண்ணர்
வேதனை கொண்டு எல்லாமே பார்க்கின்றார்
அன்று கோட்டையிலே ஓடி ஒழிந்தவர்கள்
இன்று எம் யாழ் மண்ணில் துணிவுடன் நிற்கின்றார்
இவர்களை துரத்த
இன்னும் எவ்வளவு நாட்கள்பொறுக்கவேண்டும்!
இன்னும் பொறுமை காக்கவேண்டும்
கிட்டண்ணர் வானத்தே இருந்து கேட்பதெல்லாம்
எதிரொலியாய் இங்கு ஒலித்தே நிற்கிறது
விரைவில் முடிவொன்று வருமென்று
அண்ணர் பாலா அவருக்குச் சொல்வதெல்லாம்
எமக்கு நன்றாய் கேட்கிறது!


கிட்டர் என்றதுமே
கிட்டப் போய் கதைத்திடுவார் எல்லோரும்
கிலி பிடித்து ஓடிடுவார்
சிங்களத்தின் ராணுவங்கள்
கிட்டு மாமா என்று சொல்லி
சூழ்ந்து கொள்ளும்
குழந்தைகள் எல்லாமே அவரைச் சுற்றி
எல்லோற்கும் நண்பன் அவன்
எதிரிக்கு மட்டுமே பொல்லாத சூரன் அவன்

83 யூலையிலே
சிங்களக் காடையரின் இனவெறியில்
தமிழர் பட்ட வேதனைகள்
உன் உள்ளத்தை உலுக்கி எடுத்ததனால்
பூகம்பம் ஆனாய் நீ
யாழ் மண்ணின் தளபதியாய்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆட்சிதனை
அளித்தவன் நீ
குறிதவறாது சுடுவதிலே சூரன் நீ
மேடை பேச்சினிலே மேதாவி நீ
இலக்கியவாதி நீ
எல்லாம் தெரிந்த தமிழ் வீரன் நீ

எதிரியினால் வெல்லவே முடியாத
எம் கிட்டண்ணர்
கால் ஒடிந்த போதிலுமே
மனம் ஒடிந்து போனதில்லை
தமிழ் ஈழம் நோக்கி
சமாதானத் திட்டத்துடன்
பயணித்த எம் வீர வேங்கைகளை
பொல்லாத இந்தியர்கள்
கேட்டார்கள் சரணடைய வேண்டுமென்றே
நாசகார இந்தியாவின்
நாசகாரிக் கப்பல்கள்
சூழ்ந்ததுமே எடுத்திட்டார் தம் உயிரை
எம் பத்து வேங்கைகளும்
கிட்டுவும் மற்றவரும்
மாவீரர் ஆகிவிட்டார் இந்தியாவின் சதியினிலால்
அகிம்சயை அறிமுகம் செய்தவர்கள்
எம் வீரர் குருதியில்
குளித்து மகிழ்ந்திட்டார்

தமிழ் ஈழம் மலர்வது உறுதி
யாழ் மண்ணில் நம் தமிழர்
ஆட்சி அரங்கேறும் விரைவாக
நல்லாட்சிகண்டு மகிழ்வீர்
வானத்தின் மீதிருந்தே!

Tuesday, January 15, 2008

தைப்பொங்கல்

தைப்பொங்கல்
இது தமிழர் பொங்கல்
தரணியெல்லாம் வாழும் நம் தமிழர்
போற்றிப் பொங்கிடும் பொங்கல்
தமிழனின் புதுவருடம்
பிறக்கிறது தைப்பொங்கலிலே

உலகமெங்கும் பிறக்கிறது புதுவருடம்
இளவேனிற் காலமதில்
நம் தமிழர் புது வருடம்
இளவேனில் காலமதில் வருகை தர
எமை ஆண்ட ஆரியர்கள்
வஞ்சனையாய் புகுத்திட்டார்
புதுவருடமதை சித்திரையில்
ஏமாந்த தமிழர்கள்
மறந்திட்டார் எம் புதுவருடமதை
ஆரியர்கள் திணித்திட்ட
அவலங்கள் ஆயிரத்தில்
இதுவும் ஒன்று
உணர்வார்களா எம் தமிழர்

வள்ளுவன் ஆண்டு நம் ஆண்டு
தை ஒன்றில் பிறக்கும் நம் புது ஆண்டு
தமிழர் திருநாள் எம் பெருநாள்
தைப்பொங்கல் மட்டுமேதான்
உறைக்கவே சொல்லிடுங்கள்
எம் பிள்ளைகட்கு
சித்திரை வருடக் கொண்டாட்டம்
ஓர் வீணாட்டம்
மறப்போம் அதையே
மறத் தமிழினமாய்
வரவேற்போம் எம் புது வருடத்தை
தைப் பொங்கல் தினத்தினிலே

தையிலே பொங்கலிட்டோம்
சூரியனை வணங்கி நின்றோம்
இயற்கையை மதித்தவர் நாம்
இயற்கையே நம் தோழன்
அவனே நம் கடவுள்
இயற்கையை அழித்தால்
கோவம் கொள்வான் அவன் என்றே
சொல்லி வைத்தான் தமிழன் அன்று
இன்று உணர்கின்றார் உலகத்தோர்
இயற்கை கோவம் கொண்டால்
மனிதரெல்லாம் அழிவார்கள்
மாசு படுத்தாதே சுற்றாடலையே
சொல்லி வைத்தான் தமிழன் திடமாக

இயற்கையை மதிக்கவில்லை
உலக மாந்தர்
வெட்டினார் காடுகளை
மிக வேகமாக
ஓட்டினார் கார்களையே
தேவைக்கு அதிகமாக
சமையலுக்கு, துணி துவைத்திட
குளிரூட்ட
எல்லாமே இயந்திரமயமாக
கரியமில வாயு கசிந்து வந்தே
நச்சாக்கியதே இயற்கைதனை

வெப்பம் உயர்கிறது
பூமிப் பந்தினிலே
புயல் சுனாமி பூமி அதிர்வு
அளவில்லா வெள்ளம்
அடிக்கடி நிகழ்கிறது
மனித குலமே
அழிகின்ற அலங்கோலம்
அரங்கேறும் காலம்
வெகு தொலைவில் இல்லை

இயற்கையை வணங்கினால்
இன்னல்கள் தீரும் உறுதி இது
இதை நாம் மதித்தால்
வாழ்வு வழம் பெறும்
மனிதகுலம் மாண்பு பெறும்
தைப் பொங்கல் கூறுவது
இதையே தான்
தமிழர் திருநாள் பெருமை
புரிகிறது நமக்கெல்லாம்

வரவேற்றிடுவோம் தைப் பொங்கலையே
புது வருடப் பொங்கலுடன்
போகிப் பொங்கல் மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
எல்லாப் பொங்கலையும்
வாழ்த்தி வரவேற்போம்!

Saturday, January 5, 2008

இரட்டை முகம்

நட்பென்பது நானிலத்திலும் போற்றுதற்குரியது
புலம் பெயர் மண்ணில்
புரிந்தவர்கள் எத்தனை பேர்?
நட்புக்காய் தம் நாட்டையே
இழந்த மன்னர்கள் கதை பலவுண்டு
நண்பனுக்காய் உயிர் கொடுத்த பலர் கதைகள்
இன்றும் உண்டு எம் நாட்டில்
நட்பை விலை பேசும்
நயவஞ்சகக் கூட்டம் உண்டு எம்மிடையே
நாளுக்கு நாளாய் மாற்றுகின்ற
மலிவான சட்டை என்றே
எண்ணிடுவார் மதிகெட்டோர் நட்பினையே
நட்புக்கொண்டோர் மாறிடுவார்
நயவஞ்சகராய் சிலவேளை
தெரிந்துவிடும் அவர்தம் மற்ற முகம்
அப்போது தெளிவாக
உடைந்துவிடும் அடுத்தவர் நெஞ்சம் பலமாக
பெருகிடும் இரத்தவெள்ளம்
இதயத்தின் உட்புறமாய்
மாங்கல்யம் அணிவித்து மணமக்கள் சேர்வதற்கே
சட்டம்தான் துணை நிற்கும் ஆனால்...
நட்பிற்கு விட்டுக்கொடுப்பென்ற சாட்சியுடன்
மனச்சாட்சியே சட்டமாகிறது உணர்வாரா
புலம்பெயர் மண்ணிலே புகல்கின்ற தமிழர்கள்?