Monday, September 17, 2007

என் அம்மா

உன்னை உருக்கி உடலை வருத்தி
என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்த
என் அம்மாவே
உனக்காக ஓர் கவிதை
இன்னும் படைக்கவில்லை
ஏன் என்று எனக்கே புரியவில்லை
என்னுள்ளே கலந்து நீயும் நானாக இருப்பதனால்
தனியாக உனக்காய் கவிபடைக்க முடியவில்லை
காரணமோ?
எழுத வேண்டும் பல கவிதை உனக்காக
என்றே என் மனம் எண்ணும் பல வேளை
கவிதையையும் முந்தும் என் கண்ணீர்
அணைபோட்டு விடும் என் கவிதைகளை
என் கண்ணீரே சொல்லும் ஓர் ஆயிரம் கவிதை
உனக்கு மட்டுமே கேட்கும் அக் கவிதை

அம்மா என்று அழைக்கையிலே
பொங்குகின்ற ஆனந்தம்
அகிலத்தில் எங்கேனும் கிடைக்குமா சொல்லுங்கள்
அன்பு என்றால் என்னவென்றே
அறியாத கயவர்கள்
வாழ்கின்ற இவ்வுலகில்
அன்பையே வாழ்க்கையாய் அர்ப்பணித்து
வாழ்ந்துவிட்டாய் எமக்காக

என் அம்மாவை நினைத்தவுடன்
என் உள்ளம் பாலாய்க் குளிர்ந்து விடும்
அம்மா! அம்மா! என்றே அழைக்கவேண்டும்
இன்னும் பல முறை என்றோர் உணர்வு
உன் உள்ளத்தின் ஆழத்தை
இப்போதான் என்னால் எட்ட முடிகிறது
உனக்காக வாழாது எமக்காக வாழ்ந்து
இன்று வானத்தே உறைகின்ற என் அம்மாவே
உன்னை எண்ணிப் பார்க்கையிலே
என் மனதில் ஓடுகின்ற எண்ணங்கள்
ஒன்றா இரண்டா எடுத்துரைக்க
ஓர் ஆயிரம் எண்ணங்கள்
எல்லாமே என் இதயத்துள் ஆழப் பதிந்திருக்கும்

உன்னை நினைக்கையிலே
என் கண்களிலே சொரிகின்ற கண்ணீர்
உன்னைப் பிரிந்த சோகத்தின் வெளிப்பாடா...இல்லை
அன்பின் அறிகுறியாய் ஆனந்தக் கண்ணீரா?
எனக்கு எதுவென்றே புரியவில்லை
சொல்லித்தர நீயுமில்லை
எங்களுக்காய் உன் இதயத்தைப் பிழிந்து
இரத்தத்தைக் கொட்டி நெஞ்சத்தை அழித்து
எமக்காக வாழ்ந்த அம்மாவே
உனக்காகவும் நீ சிறிது வாழ்ந்திருந்தால்
என் இதயத்தின் சுமை சிறிதேனும் குறைந்திருக்கும்

"அ" சொலிக்கொடுத்த அம்மாவே
நீ அழுவதற்கும் கொஞ்சம் விட்டிருக்கக் கூடாதா
அன்பாக எனக்கு உணவளித்தாய்
ஆடை அணியெல்லாம் நீயே எனக்களித்தாய்
உன் கையாலே குழைத்த சாதம்
அதை உண்கையிலே ஏற்படும் பெரு மகிழ்ச்சி
அகிலத்தில் எங்கேனும் உண்டா அந்த ருசி உணவுகளில்
சிக்கனமாய் சிறப்பாக வாழ்ந்தாய் நீ
சிறுகச் சிறுகச் சேமித்தே
செய்தாய் எமக்காய் எல்லாமே
வேலை எல்லாம் நீயே செய்தாய் வீட்டினிலே
படிக்கவைத்தாய் எம்மை நல்லாவே
இவ் உலகையே சுற்றி வந்தாலும்
பெறமுடியா இன்பத்தை பெற்றிடலாம்
உன்னை ஓர் முறை சந்தித்தால்
ஆண்டவனே முடியுமா உன்னால்
என் அன்பு அம்மாவை
தரமுடியுமா என்னிடமே?

No comments: