Monday, September 17, 2007

தனிமையில் வெறுமை

தனிமையிலே நான் இருந்து
வெறுமைதனை உணர்ந்து கொண்டேன்
கலகலப்பாய் நாம் இருந்த காலத்தை
ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றேன்
முன்னோக்கிப் போகின்ற என் எண்ணத்தை
பின்னோக்கித் திருப்புகின்றேன்

அம்மா அப்பாவின் அரவணைப்பில்
அந்த அளவற்ற சந்தோசம்
அண்ணன் தம்பியுடன் அடிபட்டு
அல்லோல கல்லோலமாய் வாழ்ந்த
அந்த வசந்த காலங்கள்
எடுத்தெறிய முயன்றாலும்
என்னுள்ளே மீண்டும் மீண்டும்
விசையாய் எழுந்து நிற்கிறது

பாடசாலையில் படித்த பாடங்கள்
அங்கே அடித்த கும்மாளங்கள்
பள்ளிக்கூடத்தை கட் பண்ணி
படம் பார்த்ததிலே கண்ட இன்பம்
இடையிடையே இனிமையாக வந்து போகும்
அந்தக் காதல் சுகங்கள்
பரீட்சை நெருங்க நெருங்க
பதறுகின்ற நமது நெஞ்சங்கள்
எல்லாமே பசுமையான நினைவுகளாய்
என்றுமே என் மனத்தில் பதிந்திருக்கும்

அக்கம் பக்கத்து வீடுகளில்
அளவான கல் எடுத்து விசையாய் விட்டெறிந்து
விழும் மாங்காய் எடுத்துத் தின்றதில்
நாம் பெற்ற மட்டற்ற மகிழ்ச்சி
இன்றும் இதயத்தே நன்றே நிறைந்திருக்கும்

கள்ளங் கபடமில்லா நல்ல நண்பர்கள்
இவர்களிடம்........
காசில்லை பெரிதாக
காரில்லை மொடேணாக
தற்புகழ்ச்சி செய்கின்ற இழிவில்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
ஒழிவு மறைவு ஒன்றுமில்லை
ஆனால் இவர்களிடம்.....
பகிர்ந்துண்ணும் பண்புண்டு
பழகுவதற்கு நல்ல மனமுண்டு
அழிக்க நினைத்தாலும்
என் மனத்தை விட்டு அகலாத
இந்த நினைவலைகள்

இங்கு தனிமையிலே வெறுமை
இந்த வெறுமையினை
பொல்லாத தனிமையினை
அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
கண்டால் எனக்கும் ஒருக்கால்
கட்டாயமாய்ச் சொல்லுங்கோ

No comments: