Wednesday, September 19, 2007

தமிழைத் தேடி

புலம்பெயர் நாட்டினிலே
புளுகு தமிழ் கேட்டிடலாம்
நல்ல புறம் சொல்லும் தமிழ் கேட்டிடலாம்
வசை பாடும் தமிழ் கேட்டிடலாம்
நல்ல வஞ்சனை செய்யும் தமிழ் கேட்டிடலாம்
தண்ணி அடித்த பின்னே வரும்
தளதளக்கும் தமிழ் கேட்டிடலாம்
இனிய தமிழ் கேட்க எனக்கோர் ஆசை எழுந்ததனால்
முயன்றே நானும் சென்றேன் தமிழ் நாட்டிற்கு

உல்லாச விடுதி ஒன்றில்
உறைவோம் சில நாள் என்றே
சென்றேன் நானும் உள்ளேயே
காரிகை ஒருத்தி கண் அசைத்தே வரவேற்றாள்
"என்ன வேண்டும்" என்றே இனிதாய் கேட்டு நின்றாள்
அறை ஒன்று வேண்டும் என்றேன் ஆசுவாசமாய்
அதிசயமாய்ப் பார்த்த அவள்
கேட்டாள் மீண்டும் அதை "என்ன வேண்டும்"
அறை ஒன்றே வேண்டும் என்றேன்
அடிக்குமாய்ப்போல் என்னை முறைத்தே
அதே கேள்விதனை அழுத்திக் கேட்டாள்
ஆத்திரம் கொப்பழிக்கச் சொன்னேன் நான்
அறை தர முடியாதா ஆணவம் பிடித்தவளே
அறைந்தாள் என் கன்னத்தில் படீரெனவே
ஐயோ என்று நான் அலறித் துடித்திட்டேன்
என்ன இவள் அடித்தே விட்டாள் என்னை
என்ன பிழை செய்தேன் நான்
ஆற்றாமை மேலோங்க
"றூம்" தானே நான் கேட்டேன்? ஏன் அடித்தாய்
எனக்கென்றேன்
அப்படித் தமிழில் றூம் என்று கேளுமையா
அது என்ன அறை-இங்கே இதுதான் அறை என்றாள்
வெட்கித்து நின்றேன் நான் தமிழை எண்ணி
வீங்கிய கன்னமதை நீவிக்கொண்டே

நேரம் ஓடியது விரைவாக
எனது மணிக்கூடோ ஓடவில்லை இவ்வேளை
மற்றவரை மணி கேட்க என் தன் மானம் தடை போட
புதிதாய் வேண்டுவோம் மணிக்கூடு என்றே
சென்றேன் நானும் வெளியாலே
தேடி அலைந்தேன் மணிக்கூட்டுக் கடையொன்றை
கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை அக்கடையை
மனமது சோர காலது வலிக்க சலித்து நிற்கையிலே
கண்டேன் நானும் ஓர் கனவானை
மறக்காமல் கேட்டேன் நான்
மணிக்கூட்டுக்கடை எங்கேனும் உண்டா
அதிசயமாய்ப் பார்த்தே அவர் சொன்னார்
அப்படி ஒரு கடை எவ்விடமும் இல்லை
மடையா நீ என்று திட்டினேன் மனதாலே
நடந்தேன் இன்னும் சில தூரம் நம்பிக்கையுடனேயே
நல்லவராய்த் தெரிந்த இன்னோருவர்
வந்தார் என் முன்னாலே
கேட்டேன் இரக்கமதாய் அவரிடமும்
மணிக்கூட்டுக் கடையை காட்டும் எனக்கென்று
மிரண்டு போன அம் மனிதர்
தனக்குத் தெரிந்தது தமிழ் மட்டுமே என்றிட்டார்
"ஐயா" பேசுவது நானும் தமிழ்தானே
சோன்னேன் நானும் பவ்வியமாய்
அது என்ன மணிக்கூடு அந்நிய பாசை பேசாதே
கோவமாய்ப் பதில் சொன்னார்
தெரியாதா உங்களுக்கு "watch" என்றேன்
வாச்சா அப்படிப் பேசும் தமிழ் என்றார்
திகைத்தேன் நானும் திரும்பவும் ஓர்முறை
காட்டினார் கடையொன்றை இப்போது
வாங்கினேன் நானும் வாச்சொன்றை
தமிழிற்காய் மீண்டும் வெட்கித்தபடியே

அடைந்தேன் விடுதியை நானும் அலுப்புடனே
அந்தக் காரிகையே மீண்டும் வரவேற்றாள்
அமர்ந்தேன் ஓர் இடத்தில் ஆறுதலாய்
பசியோ சிறிதாய் வயிற்றைக் கிள்ள
பார்த்தேன் நானும் அக்கம் பக்கம்
கோப்பி ஒன்று தட்டில் வந்தது அழகாக
பசியை விரட்ட இதுவா எனக்கு
வந்தே சொன்னாள் அன்புடனே
சாப்பிடுங்க சார் சாப்பிடுங்க
என்னத்தைச் சாப்பிட நான்
பசியோடு உள்ளவனைப் பழிக்காதே நீ என்றேன்
பகிடிவிடாமல் சாப்பிடுங்க இதை என்றாள்
சாப்பாடே இல்லாமல் சாபிடுவதெவ்வாறு
பரிகாசம் செய்யாதே பாவம் உனக்கே என்றேன்
காப்பியைச் சாப்பிடுங்க ஆறினால் அநியாயம் தான் என்றாள்
கோப்பியைக் குடிக்கத்தான் முடியுமென்று
சத்தமாய்ச் சொல்லி என் கன்னத்தில்
நானே அடித்து விட்டேன்
இல்லை அறைந்து கொண்டேன்
தமிழிற்காய் வெட்கித்தபடியே

கோப்பியைக் குடித்துவிட்டே
கனமான சிந்தனையில் நான் இருந்தேன்
சாப்பாட்டுச் சிந்தனையை அறவே கைவிட்டு
சரியான நித்திரை ஒன்றைக் கொள்வோம் இப்போது
என்றே எண்ணி நிற்கையிலே
மீன்டும் வந்தாள்! முழி பிதுங்கியது எனக்கு
தூங்கப் போங்க இப்போ என்றாள்
அதிர்ந்து போனேன் ஐயோ என்றே அலறிவிட்டேன்
தூக்கில் தொங்க விடுவதற்கு
செய்த குற்றமென்ன சொல் என்றேன்
நேரம் என்ன தெரிகிறதா?
தூங்க வைக்கிறேன் பார் என்றாள்
நடுங்கிப் போய் நான் சொன்னேன்
நாளையே போறேன் நாட்டிற்கு
நித்திரை கொள்ள முடியுமா இப்போ நான்
கேட்டேன் படபடக்கும் நெஞ்சுடனே
அதையே சொன்னேன் தானும் என்றாள்
இருந்த தமிழும் மறந்து போக
அடுத்த நாளே வந்து சேர்ந்தேன் இவ்விடமே
தமிழிற்காய் வெட்கித்தபடியே!

No comments: