Wednesday, June 16, 2010

பத்து வயதினிலே சுமைதாங்கியானாய்

இவ் உலகில்
நான் ஏன் பிறந்தேன்
கேள்வி ஒன்று
எழுவதுண்டு என் மனதில்
பலவேளை
விடை தெரியாமல்
விழி பிதுங்கி நிற்பதுண்டு


எம் குடும்பத்தின் குலவிளக்காய்
நிதுரா நீ வந்துதித்த பின்னாலே
உணர்ந்து கொண்டேன்
என் பிறப்பிற்கும்
ஓர் அர்த்தம் உண்டென்று
உன்னைப் போல் ஓர் பிள்ளை
இவ் உலகிற்கு தருவதற்காய்
இயற்கை அன்னை அவள்
என்னைப் படைத்திருப்பாள்
இப் பூமிப் பந்தினிலே

பச்சைக் குழந்தையாய் இருந்தபோது
படு சுட்டி நீ
என் மடியினில் உன் தலை வைத்து
கால் அசைத்து பின் அமைதியாய்
துயிலும் உன் அழகு முகம்
மறக்க முடியா நினைவுகளாய்
மனதில் உறைந்தே இருக்கிறது

நான்கு ஐந்து வயதினிலே
"Under ground, Over ground"
"Hallunda, mannunda"
என்று
நீ சொல்லிய நகைச்சுவைகள்
உன் மழலையில் மகிழ்ந்திருந்தோம்
நாமெல்லாம்....

பத்து வயதினிலே நீ
சுமைதாங்கியானாய்
எம் குடும்பத்திற்கே!
அப்பா ஆஸ்பத்திரியில் படுத்திருந்தால்
விடிகாலை ஆறு மணிக்கே
ஆயராவாய் நாள் தவறாமல்
அதன் பின்பே செல்வாய் பாடசாலைக்கே
மறக்காமல் வருவாய் மாலையிலும்

அன்பைச் சொரிந்தாய்
எம் மீதெல்லாம்
அன்பாகப் பேசிடுவாய்
ஆத்திரம் வந்துவிட்டால்
அட்டகாசமாய்ப் கத்திடுவாய்
பத்து நிமிடம் பேசாமல் இருக்கமாட்டாய்
இப்போதும் கோவமா என்றிடுவாய்

ஆண்டவன் தந்த அற்புதப் பிறவி நீ
எம் குடும்பத்தைக் காக்க வந்த
காவல் தெய்வம் நீ
குடும்பத்தின் துன்பத்தில் துயரத்தில்
எல்லாம் பங்கெடுப்பாய்
துணிவாக நின்று எம் துயர் தீர்க்க
தோள் கொடுப்பாய்

பாடசாலையிலே நீ
பலே கெட்டிக்காரி
குறும்புத் தனத்தில் நீதான்
முதல் இடத்தில்
எல்லோரும் உன்னில்
அளவில்லா அன்புடனே
சோட்டி என்றே அழைத்திடுவார்
உனைத் தூக்கி விளையாடி
மகிழ்ந்திடுவார்

நீ எனக்கு மகளல்ல
என் தாயின் மறுபிறப்பு
உன் அம்மாவின்
அம்மாவின் காபன் கொப்பி நீ
அக்காவின் செல்லத் தங்கை நீ
ஒரு நாள் நீ எம் வீட்டில்
இல்லையென்றால்
எம் வீடே அமைதியாய்
உறங்கிவிடும்

உன்னை எமக்கு அளித்ததற்காய்
நன்றி சொல்கின்றோம் அந்த
இயற்கை அன்னைக்கே!