Tuesday, November 24, 2009

கொடுமை இது! பகற் கொள்ளை இது!

என் இதயத்தை
ஓர் சம்மட்டியால் ஓங்கி
அடிப்பது போல் ஓர் உணர்வு
கல் நெஞ்சக்காரர்களா
நாம் மனிதர்?
கருணை அன்பு எதுவுமே
புரியாத அற்பப் பதர்களா
நாம் எல்லாம்?
ஓர் ஆயிரம் கேள்விகள்
விடை தெரியாது விக்கித்து நின்றேன்
வெட்கத்துடனேயே

மாட மாளிகை போன்றதோர் வீடு
அங்கு ஓர் பசு மாடு
கழுத்தில் கயிறு கட்டி
தொட்டிலில் சிறைப்பட்டிருந்தது
பாவம் அது.....
இங்கோர் தொட்டிலில்
தாய்ப் பசு
கண்ணுக்கெட்டாத் தூரத்தில்
அதன் கன்றுக் குட்டி
என்ன கொடுமை இது?
தன் தாய்ப் பாலைக்
குடிக்கத் தடுப்பதற்காய்
இந்தச் சிறைவாசம்

தலை முழுகிப் பொட்டிட்டு பூச்சூடி
வந்த வீட்டின் தலைவி
தருகின்றாள் விடுதலை
கன்றுக்குட்டிக்கு.....
துள்ளிக் குதித்து மகிழ்வுடனே ஓடிவந்து
தன் தாயின் முலையிலே
குடிக்கிறது பாலை மகிழ்வுடனே
என்னவோர் அநியாயம்
இடை நடுவே
கன்றை இழுத்தெடுத்து
தாயின் முகத்தருகே
நிற்கவைத்து
கறக்கின்றாள் களவாக
பசுவின் பால்தனையே
என்ன கொடுமை இது
பகற் கொள்ளை இது

கறந்த பாலுடனே
செல்கின்றாள் கோவிலுக்கு
பக்தி பரவசமாய் தருகின்றாள்
பால்தனையே ஐயரிடம்
அமோகமாய் நடக்கிறது
அபிசேகம்
அரோகரா சத்தம் வானைப் பிளக்கிறது
இங்கே பக்தர்கள்
தீர்த்தமாய் பாலைக் குடித்துக் கொண்டிருக்க
அங்கே கன்றுக்குட்டி பசியுடன்
தாயின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறது
மனிதனுக்கு மட்டுமா
தாய் பிள்ளைப் பாசம்?

Friday, November 6, 2009

தூக்கமில்லா இரவுகள்

நள்ளிரவு கண் விழித்தேன்
அப்பா அப்பா என்ற குரல் கேட்டு
அழுது துவண்டாய்
நோத் தாங்காமல் என் மகளே

என்....
கண்கள் அழுதன‌
கண்ணீர் சொரிந்தது
இதயம் கனத்தது
இரத்தம் உறைந்தது
இரவு அப்படியே இருந்தது
பகல் தொலைந்தது
உன் துயர் கண்டு
பார்வை மங்கிப் போனது
தூக்கமில்லா இரவுகள்
இன்பமில்லாப் பொழுதுகள்
எதையும் செய்யவில்லை
நான் நானாக....
அந்த ஓர் மாதம்...

என் அருமை மகளே
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் உள்ளம் வடிக்கும்
இரத்தக் கண்ணீரை
நீ கலங்கி நான் பார்த்தால்
என் இதயம்
உடைந்துவிடும் சுக்கு நூறாக‌
காலையிலும் மாலையிலும்
உன் கனிவான முகத்தை
பார்த்தே நாம் மனம் மகிழ்வோம்
நீ இல்லா ஒவ்வோர் நிமிடமுமே
எம் வீட்டில் ஓர் யுகமாகும்
ஓர் மாதம் நீ பட்டாய் வேதனைகள்
ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே
இயற்கையின் சோதனையோ
விதியின் விளையாட்டோ
யாம் அறியோம்
நீ சுகமாய் திரும்பி வ‌ந்ததற்காய்
சொல்கிறோம் நன்றிதனையே
இயற்கை அன்னைக்கே!