ஐம்பது வயதினிலே அரைக்கிழமாய்
நான் இன்று வரைகின்றேன் இக்கவிதை
என்னுள்ளே புதைந்து கிடக்கின்ற
எண்ணக்கிடக்கைகளை
அள்ளித் தெளிக்கின்றேன்
அன்பு கொண்டவரே கொஞ்சம் கேளுங்கள்
ஐம்பத்து நான்கினிலே அன்பான என் அம்மா
என்னைப் பெற்றேடுத்தாள் இப் பாரினிலே
என்க்கோர் தெய்வம் உண்டென்றால்
தெளிவாகச் சொல்கின்றேன் அது என் அம்மாதான்
என்னை விட்டு நீ பிரிந்தாய் இம் மண்ணை நீ துறந்தாய்
ஆனால்.......
என்னுள்ளே நீ இருக்கின்றாய் எனக்காக வாழ்கின்றாய்
உன்னை நித்தமும் நான் நினைக்கின்றேன்
உணர்வாயா என் அம்மா!
கண்டிப்பான என் அப்பா
கருணையிலும் நீ முதலிடம்தான்
உனக்காக வாழாது எமக்காக வாழ்ந்த
எனதருமை அப்பாவே உன்னைப்போல்
வாழ வழியொன்று தேடி அலைகின்றேன் நான் இங்கு......
ஐந்துடன் ஒன்று ஆறு சகோதரராய்
வாழ்ந்த அவ் வாழ்க்கை
அடி பிடி சண்டை போடுகின்ற நேரங்கள்
அன்புடன் அரவணைக்கும் அந்தக் காலங்கள்
கலகலவெனவே கேட்டிடும் சிரிப்பொலிகள்
அம்மா அடிக்கவர
அக்காமார் தடுக்கின்ற சில கணங்கள்
அந்தவொரு சந்தோசம்
அகிலத்தில் இனி எனக்கில்லை எந்நாளும்
முப்பதுரண்டினிலே முத்தான முழு நிலவாய்
முல்லை மலர்ச் சிரிப்புடனே
என் வாழ்க்கையில் இணைந்து கொண்டாள்
இதயத்துள் புகுந்து கொண்டாள்
அழகான அவள் சிரிப்பழகில்
என்னையே நான் மறந்திடுவேன்
மனைவியாய் நான் அவளை நினைத்துப் பார்க்கவில்லை
என் குழந்தையவள்....எனக்கோர்
நிகரில்லா நண்பியவள்
தாயில்லாக் குறையை தணிக்கும் தாரமவள்
கடுமையான நோயில் நான் தவித்துப் போகையிலே
உன் உள்ளத்து அன்பை
நான் முற்றாய் உணர்ந்து கொண்டேன்
உணவை ஊட்டிவிட்டாய் உன் கைகளினால்
உண்ணாவிரதம் பல இருந்தாய் என் மீட்புக்காய்
எனக்காக நீயே எல்லாம் செய்து தந்தாய்
ஆண்டவனே உனக்கு நன்றி கூறுகின்றேன்
இவளை எனக்கு நீ அளித்ததற்காய்...
அன்பான பிள்ளைகளை எண்ணிப் பார்க்கையிலே
அளவில்லா ஆனந்தம் என்னுள்ளே பொங்கியெழும்
குடும்பத்தின் குலவிளக்கே நீங்கள் தான்
கள்ளங்கபடமில்லா சிறுமிகள் நீர்
காலம் எங்கே போனாலும்
வயது ஏறிச் சென்றாலும்
சிறு குழந்தைகளே நீர் எனக்கு
விடலைப் பருவத்தே பெற்ற நண்பர்கள்
காலத்தால் அழியாத அவ் நினைவலைகள்
சந்தியிலே நாமிருந்து போட்ட சத்தங்கள்
நக்கலடித்துப் பாடிய பாட்டுக்கள்
பாடசாலையிலே பண்ணிய அட்டகாசங்கள்
மாங்காய் தேங்காய்
மதிலேறிப் பறித்த அநுபவங்கள்
களவாகக் கள்ளடித்த அந்தக் கூவங்கள்
கள்ளமாய்ப் பார்த்து
காதலுக்காய் ஏங்கிய காலங்கள்
மருத்துவக் கல்லூரியில் போட்ட கும்மாளங்கள்
எல்லாமே என் மனதுள்
பசுமையாய் பதிந்திருக்கும்
சிங்களப் பகுதியிலே வேலை செய்த நேரங்கள்
சிந்தையிலே என்றும் நிறைந்திருக்கும்
ஆண்கள் பெண்கள் கூடியமர்ந்து
அங்கே அரட்டை அடித்த அநுபவங்கள்
இன்னும் என் மனத்தில் இனிமையாய் ஓடி வரும்
மாலை தீவை மறக்கமுடியுமா என் வாழ்நாளில்
அன்பான மனைவியுடன் அளவில்லா மகிழ்ச்சியுடன்
ஒவ்வோர் நாளுமே அங்கே ஒவ்வோர் தேனிலவு
ஓமானில் வாழ்ந்த வருடங்கள்
புதிய நட்பினைப் புகுத்திய காலமது
நல்ல நண்பர்கள் உண்மை நண்பர்கள்
இன்றும் என்னுடன் உரையாடும் அன்பு உள்ளங்கள்
தந்த காலமிது....இனி வருமோ அக்காலம்
சுவீடன் நாட்டினிலே இருக்கின்ற இக்காலம்
அட்டகாசமில்லாத அமைதியான ஓர் காலம்
உதவிக்கு ஓடி வர ஊர்க்கார நண்பர்கள்
அக்கம்பக்கத்தே அரவணைக்கும்
எமது தமிழ் அன்பர்கள்
ஆபத்து என்று சொன்னால்
இங்கு தமிழினமே ஒன்று சேரும்
குடும்ப வாழ்க்கைக்கு
குறைவேதுமில்லை இந் நாட்டினிலே
வாழ்ந்துவிட்ட ஐம்பது ஆண்டுக் காலத்தை
எண்ணிப் பார்க்கின்றேன்
நம்பவே முடியவில்லை
எனக்கா ஐம்பது?
என்னால் நம்பவே முடியவில்லை.
2 comments:
Its great that you could tell your 50 year life thru a simple poem.
Good
Thank u verymuch.
Pon Sivraj
Post a Comment