Wednesday, December 26, 2007

பாவம் அவன்

அன்பான குடும்பம் ஒன்று
அமைதியாய் வாழ்ததிங்கு
அளவான வருமானம்
அதுவே போதுமென்று
அடக்கமாய் அட்டகாசம் செய்யாது
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்
கறுப்பிலே வேலையென்றால்
கண்டிப்பாய் சொல்லிடுவான் நோ என்று
உண்ண உணவுண்டு
உடுப்பதற்கு நல்ல உடையுண்டு
உறைவதற்கு அழகான வீடுண்டு
இனியென்ன வேண்டும் நமக்கென்று
இனிமையாய் வாழ்ந்திட்டான்

ஆடம்பரம் என்றாலே அது
நமக்கெதற்கு என்றிடுவான்
நாட்டிலே நாமிருந்த கோலத்தை
எண்ணிப்பார் என் இனியவளே என்றிடுவான்
பனை ஓலை வேய்ந்த வீட்டினிலே
பக்குவமாய் எரிகின்ற அரிக்கன் லாம்புடனே
நாமிருந்த வாழ்க்கைதனை நினைத்துப்பார்
என்றே பேசிடுவான்
கடகத்தில் கத்தரிக்காய் வாழைக்காய்
கருவாடு என்றெல்லாம்
தலையில் சுமந்தே உன் அம்மா
சந்தைக்குப் போய் வியாபாரம்
செய்ததை மறந்தனையோ நீ என்பான்
மாட்டு வண்டியிலே மண்பாதை வீதியிலே
கூடி நாம் போனவைகள் எல்லாம்
நினத்துப்பார் என்றிடுவான்

வில்லா(வீடு) வேண்டுகின்றார்
வித விதமாய் கார் எல்லாம் ஓடுகின்றார்
வட்டிக்குப் பணம் கொடுக்கின்றார்
வசதியாய் வாழ்க்கை வாழ்கின்றார்
பளபளப்பாய் சாறிகள் உடுக்கின்றார்
பகட்டாய் நகையெல்லாம் அணிகின்றார்
பகலென்றும் இரவென்றும் பாட்டிகள் வைக்கின்றார்
நாம் வந்து வருடங்கள் பத்தாச்சு
கண்ட பயன் என்ன இந்தச் சுவீடனிலே
கால் தூசிக்கும் மதிப்பில்லை நமக்கிங்கு
காசு பணம் இருந்தால்தான்
கடவுளுமே கண் திறப்பார் இந் நாட்டில்
இனியும் பொறுக்க முடியாது என்னால்
இன்றே தேடும் பணமென்றாள்
தத்துவங்கள் எல்லாமே வீசி எறிவீர் இன்றோடு
கொள்கை என்று சொன்னவற்றை
கொலை பண்ணி எறியுமையா
தமிழன் என்றோர் இனமுண்டு-இங்கே
தனித்துவமாய் அவனுக்குச் சில குணமுண்டு
நாமும் சேர்வோம் அவரோடு
நன்றே வாழ்வோம் பணத்தோடு
இது ஒன்றும் புதினமில்லை வெளிநாட்டில்
பயப்பட ஒன்றுமில்லை, பாவம் நீங்கள்
ஒன்றுமே தெரியாது உங்களுக்கு
எல்லாமே சொல்லி வைத்தாள் பக்குவமாய்
மாண்புமிகு மனைவியவள்

இன்று நாட்டை வெறுத்திட்டான்
நல்ல கொள்கைகளை விட்டிட்டான்
தானிருந்த நிலமைதனை
சத்தியமாய் மறந்திட்டான்
பேராசை பிடித்தவனாய்
இரவு பகலாய் வேலை செய்கின்றான்
பணத்திற்காய் பாசத்தையே விற்றிட்டான்
வட்டிக்குப் பணமென்றால் எப்பவுமே ரெடி என்பான்
நல்ல நட்பையெல்லாம்
தூர வீசி எறிந்திட்டான்
காசுக்காய் நயவஞ்சகங்கள்
சளைக்காமல் செய்திடுவான்
சிறையிலே இருப்பதற்கும்
சித்தமே எப்போதுமென்பான்
சட்டத்தை மதிக்காமல்
கடத்தல்கள் செய்திடுவான்
சேர்த்திட்டான் பணமதனை ஒருவாறாய்
நிம்மதியை இழந்திட்டான்
பணக்காரன் ஆயிட்டான்

பாவம் அவன்
உண்மையில் பணக்காரன் என்றால்
என்னவென்று புரியவில்லை அவனுக்கு
பாவம் அவன்.

No comments: