புற்று நோயென்னும்
பொல்லாத அரக்கனிலால்
புனிதமான எம் பாலா அண்ணன்
உயிர் பறித்த செய்திதனை
கேட்ட உலகத் தமிழர்
இதயமெல்லாம் உறைந்து போய்
உணர்வற்றுக் கிடக்கிறது
சிங்களத்தின் கிபீர் விமானங்கள்
பொழிகின்ற குண்டுகளே
உலுக்காத தமிழ் மனத்தை
உலுக்கியதே உன் மரணம்
எம் அண்ணன் உயிர் பறித்த காலனவன்
தமிழ் இனத்தின் கவலைகள்
புரியாத கொடிய பாவியவன்
ஓர் இனத்தின் விடியலுக்காய்
தன் தொழில் துறந்து
சொத்து சுகம் இழந்து
உயிரை மட்டுமே
தன்னகத்தே வைத்திருந்த எம் பாலாவை
ஏன் கவர்ந்து கொண்டாய் கொடியவனே
மரணித்த பாலா அண்ணர்
வந்துதிப்பார் தமிழ் ஈழத்தில்
மீண்டும் ஓர் முறை சத்தியமாய்
அரசியல் துறையினிலே
அதி சிறந்த விரிவுரையாளனாய்
நீ இருந்தாய் அகிலம் போற்ற
தமிழ் ஈழ மக்கள் அனைவருமே
உன் உடன் பிறப்பாய் நீ உணர்ந்தாய்
தமிழ் மண்ணை தாயிலும் மேலாக
நேசித்த உத்தம புருசன் நீ
சென்னயிலே எம்
தானைத் தலைவனை சந்தித்த மறு கணமே
துறந்தாய் உன் உல்லாச வாழ்க்கைதனை
இணந்தாய் எம் போராட்டத் தீயினிலே
முப்பது வருடமதாய்
தமிழ் ஈழப் போராட்டம்
தலை நிமிர்ந்து நிற்பதற்காய்
சளைக்காமல் உழைத்தாய் நீ
உயிரையும் துச்சமேன மதித்தே!
பேச்சு வார்த்தை மேசைதனில்
நகைச்சுவையாய் விடயத்தை
நாசூக்காய் விட்டெறிவாய்!
மதியுரையர் பாலா அண்ணர்
மதிநுட்பம் வென்று வரும் என்றே
நம்பிடுவார் உலகத் தமிழரெல்லாம்
பதில் சொல்லமுடியாமல்
பதுங்கிடுவார் எதிர் தரப்பார்
ஈழத் தமிழ் இனத்தின் வேட்கை தனை
அவர்கள் வேண்டுகின்ற உரிமைகளை
சிங்களத்தின் கொடுமையினை
உலகம் புரிந்து கொள்ள வைத்தவனே
மாவீரர் நாளினிலே நீ
சொல்கின்ற விளக்கவுரை
அறு சுவையும் அள்ளித் தெளித்தே
தேன் அமுதாய் பாய்ந்து வந்து
எம் இதயத்துள் புகுந்து கொள்ளும்
மாமனிதரையும் ஒரு படி விஞ்சிய
மதி மாமனிதன் நீ
எம் தேசியத் தலைவனின்
தேசத்தின் குரல் என்னும்
பட்டம் பெற்றவன் நீ
எவருக்கும் அடிபணிய மாட்டாய் நீ
வல்லரசு என்றாலும்
இணத்தலைமை ஆனாலும்
இந்தியாவாய் இருந்தாலும்
சிங்களத்தின் சிந்தனையே ஆனாலும்
மதியுரையர் பாலாவின் மதி நுட்பம்
எதிர்த்தே வெற்றி கொள்ளும்
எதற்க்கும் அஞ்சாத மனிதன் அவர்
ஆயுதம் ஏந்தாத அதிசயப் போராளி
ஆம் நீர் ஓர் அதிசயப் போராளி
தமிழ் ஈழ மீட்பிற்காய் தன்னையே
அர்ப்பணித்த ஓர் அதிசயப் போராளி
ஆலோசனை வேண்டி ஆறுதல் வேண்டி
எம் தலைவன் பிரபா
ஓடுகின்ற பாலா அண்ணா
நீண்ட காலமாய் நீரிழிவு நோயை
எதிர்த்தே வெற்றி கொண்டாய்
சிறுநீரகங்கள் செயல் இழந்த போதும்
சிறிதளவும் கலங்கவில்லை நீ
போராளியின் சிறுநீரகம்
பொருத்தியுள்ளேன் நானென்று
பெருமிதமாய் சொல்வாய் நீ
புற்று நோயை மட்டும்
புறமுதுகிடச் செய்ய முடியாது
போனது ஏன் ஐயா
கல் நெஞ்சுக் கார காலன் அவன்
வஞ்சனையாய் எடுத்திட்டான்
உன் இன் உயிரை
எம் மக்கள் துயர் துடைக்க
எழுந்து வரமாட்டாயா எம் பாலா அண்ணா
இன்னும் பல ஆண்டு வாழ்வாய் நீ என்று
நம்பினோம் நாமெல்லாம்
நீ ஓர் ஏமாற்றுக் காரன் ஐயா
பொல்லாத வருத்தங்கள்
பலவும் சுமந்து கொண்டே
நகைச் சுவையும் அறு சுவையும்
கலந்து பேசி நம்ப வைத்தாய்
நம்மை எல்லாம்
நீடூழி வாழ்வாய் நீ என்றே
நாமெல்லாம் நம்பி ஏமாந்தோம்
தமிழன் இதயமெங்கும்
துள்ளித் திரிந்தவன் நீ
தன் நிகரில்லா எம் தலைவனுக்கு
உற்ற துணைவன் நீ
தமிழீழ விடுதலைக்காய் வித்தாகிப் போன
விடுதலை வீரர்களின் மனங்களிலே
உறைந்து கிடப்பவன் நீ
ஈழத் தமிழன் பெருமை கொள்ள
அரசியல் உலகினிலே
அட்டகாசமாய் புகுந்து விளையாடியவன் நீ
தமிழர் இதயமெங்கும் பேரிடியாய்
வீழ்ந்த செய்தி இது
ஓர் சத்தியத்திற்காய் வாழ்ந்த
விடுதலை வீரன் இன்று
வித்தாகிப் போகின்ற செய்திதனை
செவி மடுக்க மறுக்கிறதே
என் செவி இரண்டும்
தினம் தினம் சாவோடு போராடி
உன் உடலெல்லாம் உபாதைகள்
வாட்டி வதைத்தெடுக்க
தளர்ந்து போகாது
இலட்சியத்தில் மட்டுமே உறுதியாய்
இருந்தவன் நீ
துன்பத்தில் நீ துவண்ட போதெல்லாம்
உலகத் தமிழினமே உனக்காய்
இரத்தக் கண்ணீரச் சிந்தியதே
அறிவாயா பாலா அண்ணா
உன் மூச்சுக் காற்று
உலகெல்லாம் சுற்றி வந்து
எம் சுவாசக் காற்றில் கலந்து
எம்முள்ளே இரத்தத்துடன்
கலந்தே இருக்கிறது
காலன் உன்னைக் கவர்ந்தாலும்
உன் மூச்சு எம்முள்ளே
என்றும் நிலைத்திருக்கும்
எம் பாலா அண்ணன்
நீண்டு நிலைத்திருப்பார் எம்முடனே
கடைசித் தமிழன் மூச்சு உள்ளவரை
ஈழம் காணும் வீறுடனே
அகிலமும் சுற்றி வந்த பாலா அண்ணா
மீழாத் துயில் கொள்ளும் செய்தி
ஈழத் தமிழரின் இதயத்தில்
இன்னுமொரு ஆணியை இறுக அடிக்கிறது
புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்
என்று எடுத்துரைத்தவனே
தமிழ் ஈழம் மலரும் இது திண்ணம்
என்றே மலர் வளையம் சூடுகிறோம்
கனத்த மனத்துடனே
படுக்கையிலே நீ சாவிற்காய்
நாட்களை எண்ணிய வேளையிலும்
உனது துயரமெல்லாம்
எம் இனம் படும் துன்பத்தின்
ஒரு பருக்கை என்பாய்
மரணம் ஓர் துன்பமல்ல
இனிப் பணி செய்ய முடியாமல் போவதுதான்
தன் மனக் கவலை என்பார்
இனியும் பாலா அண்ணாவின் கதை சொல்ல
கல் நெஞ்சம் எனக்கில்லை
மாவீரர் வானத்தே
உன்னை மலர் தூவி
வரவேற்கக் காத்தே இருக்கின்றார்
தமிழ் ஈழம் மலர்வது உறுதி
என்று நீர் போடும் சத்தம்
எமக்கு உரத்தே கேட்கிறது
தமிழினத்தின் விடியலுக்காய்
தன்னையே அர்ப்பணித்த
இந்த வீரனுக்கு என்
தலை குனிந்த வணக்கங்கள்.
1 comment:
from Which university Bala Anna got his Doctorate degree from? can some one please tell
Post a Comment