Wednesday, December 26, 2007

இரத்தக்கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றேன்

(இக் கவிதை சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ்சில் நடந்த உண்மைச் சம்பவத்தின் போது என்னால் எழுதப்பட்டது)


தமிழ் அரக்கர்(கள்) இருவரினால்
தன்மானம் இழந்து
தன் உயிரையும் மாய்த்துவிட்ட
அந்த தமிழ் மழலைக்கு
என் இதயத்தில் இருந்து
கொட்டும் இரத்தக் கண்ணீரை
காணிக்கை ஆக்குகின்றேன்

நம் நாட்டில்
நம் ஈழத்தமிழ் நாட்டில்
சிங்களக் காடையரின் சினந்த பார்வையும்
சீண்டுகின்ற சின்னத்தனமான வாசகமும்
கண்டு கொதித்தெழுந்த தமிழ் இனமே
இன்று வெட்கித் தலை குனிந்து
மனம் புண்பட்டு
மாற்றானின் கேள்விக்கு
மறுமொழி சொல்லத் தெரியாமல்
ஓடி ஒழிகின்ற தமிழ் இனமே!

இங்கு அயல் நாட்டான் வரவில்லை
அந்நியன் நம்மைப் பார்த்துச் சீறவில்லை
அரசாங்கம் நம்மை நசுக்கவில்லை
எம்மவர்கள்! ஐயோ! ஐயோ! எம்மவர்கள்!
ஆம் இவர்கள் எம்மவர்கள்
சொல்ல நா எழவில்லை
தொண்டை இடம் கொடுக்கவில்லை
இதயம் வெடிக்கிறது! ஆம் இதயம் வெடிக்கிறது!
நம் தமிழன் அரக்கன் ஆனான்
காம வெறியன் ஆனான்
நம் பிஞ்சு மழலைகளை
வெட்டிக் குவிக்கின்ற
கொலை பாதகன் ஆனான்
எம்மவர்கள்! ஐயோ! ஐயோ! எம்மவர்கள்!

அன்பான ஓர் பிள்ளை
வஞ்சகம் சூது ஏதுமறியா
பால் வடியும் ஓர் தமிழ்ப் பிள்ளை
ஆருக்கும் பிள்ளைகளில் கோபமில்லை
மனத் தாபமில்லை
கொலைவெறியர் கூட
பிள்ளைகளை அவ்வளவாய் வதைப்பதில்லை
நாட்டிலே இருக்க வழியில்லை! ஓர் நாதியில்லை!
நாம் ஒற்றுமையாய் ஓர் நாளும் இருந்ததில்லை
சிங்களக் காடையரின் கண்ணினிலே
நம் பிள்ளைகளை சிக்கவைக்காமல்
ஓடி வந்தோம்! ஓடி வந்தோம்!
அகதிகளாய் ஓடி வந்தோம்!
அங்கு தமிழன் ஒன்றுபட்டால்
இன்று இந்த இரண்டும் கெட்டான் வாழ்வு நமக்கில்லை

அந்தோ பரிதாபம்! ஐயோ பரிதாபம்!
மாமா! மாமா! என்று
பாசமுடன் அழைக்கும் மழலையையே
மானபங்கம் செய்யத் துணிந்திட்டான் மடைத் தமிழன்
நம் மண்ணிற்கே ஈனம் படைத்திட்டான்
நம்மையெல்லாம் தலை குனிய வைத்திட்டான்
நிதர்சினி என்கின்ற சின்னச் செல்வத்தை
நிரந்தரமாய் தூங்க வைத்திட்டான்

பல கலையும் பக்குவமாய் படிக்க வைத்து
பாரினிலே பல பேரும் போற்றி வாழ்ந்திடுவாய் என்று
பகல் இரவாய் பாடு பட்டுழைத்த
பெற்றோரை விட்டு விட்டு
பாதி வழியில் வானுலகம் சென்று விட்டாய்
இல்லை! இல்லை! உன்னை வானுலகம்
அனுப்பிவிட்டார் அந்தக் கயவர்...
கயவனே! காடையனே!
அங்கெல்லாம் நம்மவர்கள்
இரவென்றும் பகலென்றும் கண்விழித்து
நமக்காகப் போராடும் பொழுதினிலே
நீ இங்கு நம் மழலைகளின் மானத்தைப் பறித்து
அவர்கள் குருதியிலே குளித்து மகிழ்கின்றாய்
ஆம்...
அவர்கள் குருதியிலே குளித்து மகிழ்கின்றாய்
மலர்கின்ற நிதர்சினியின் முகத்தினிலே நீ
மலர்வளையம் சாத்த வைத்துவிட்டாய்

காம வெறியனே! கல் நெஞ்சக்காரனே!
நாமெல்லாம் உன் முகத்தில்
காறித் துப்புகின்ற வேளையைத்தான்
எதிர்பார்த்து இருக்கின்றோம்
ஆம்.....
உன் முகத்தில் காறித் துப்புகின்ற
வேளையைத்தான் எதிர் பார்த்து இருக்கின்றோம்

நிதர்சினியே!
உன்னை நாம் இன்று இழந்திட்டோம்
உன் பால் வடியும் முகத்தை பலி கொடுத்திட்டோம்
உலகத் தமிழரெல்லாம் உன் நினைவால்
உறக்கமின்றி இருக்கின்றார்
கண்களிலே வழிகின்ற கண்ணீரை
அணை கட்ட முடியாமல் தவிக்கின்றார்
என் நெஞ்சத்தின் இரத்தக் கண்ணீரால்
அம் மழலைக்கு உங்களுடன் சேர்ந்து
ஓர் அஞ்சலி செலுத்தி முடிக்கின்றேன்.

No comments: