Monday, January 28, 2008

ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு!

அடுக்கடுக்காய் வந்த அகதிச் செய்திகளை
கேட்டபின் என் பேனாவைத் தொட்டதனால்
விளைந்ததுதான்
என் இதயத்தில் இருந்து எழுந்து வரும் இக் கவிதை
அகதிகளாய் வருகின்ற
என் அருமை தம்பிகளே தங்கைகளே
உங்களின் வருகையினை
வரவேற்க என்னால் முடியவில்லை
ஏன் என்றால் உங்கள் வருகை
சாவிற்கும் வாழ்க்கைக்கும் இடைப்பட்டே இருக்கிறது
நீங்கள் சாவுடன் மோதி கவிழ்கின்ற கப்பலிலும்
மூட்டை ஏற்றும் கொன்ரெயினரிலும்
மூச்சு விடமுடியாது
இறக்கின்ற செய்திகளை கேட்கும்போது
எப்படி உங்கள் வருகையை நான் வரவேற்பேன்

இத்தாலிக் கடற்கரையில்
கப்பலில் கவிழ்ந்தவன் தமிழன்
இந்தோனேசியாவில் இன்றும்
அடைபட்டுக் கிடப்பவன் தமிழன்
அவுஸ்திரேலியாக் கடற்பரப்பில்
அவலப்படுபவன் தமிழன்
துருக்கிச் சிறைகளில்
வாடி வதங்குபவனும் தமிழன்
ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு
ஐயா! ஏன் இந்தக் கொடுமை தமிழனுக்கு!

வாயாரச் சாப்பிட்டு சீராக இருந்தவன் தான் தமிழன்
கலையிலும் கலாச்சாரத்திலும்
வெள்ளையனை விஞ்சியவன் தமிழன்
தன்மானம் உள்ளவன் தான் தமிழன்
தரணியெங்கும் புகழ் கொண்டவன் தான் தமிழன்
இன்றோ ஐரோப்பிய நாடெல்லாம் அகதிகளாய்
அல்லல் படலாமா தமிழன்?
சுதந்திரம் கேட்பதெல்லாம்
சுயநிர்ணய உரிமையுடன் வாழ வழி கேட்பதெல்லாம்
இவ்வுலகில் ஓர் கிரிமினல் குற்றமா?
நம் பெண்களெல்லாம் தம் கற்பை
காப்பதெல்லாம் ஓர் பாவமா?
நம் மழலைகளை
மாற்றானின் துப்பாக்கிச் சன்னங்கள் துளைக்காமல்
பாதுகாப்பதுவும் ஓர் கொடுமையா?
அன்னையை தந்தையை அடிக்கவரும் ஆமிக்காரனை
எதிர்ப்பதுவும் ஓர் இகழ்ச்சியா?

ஐ நா என்கின்றீர்
உலகத்தின் அவலம் எல்லாம்
தீர்ப்பவர் நீர்தான் என்கின்றீர்
ஐரோப்பிய நாடுகள் எல்லாம்
தார்மீகத்தின் தந்தைகளாம்
அமெரிக்காவே அன்புடன்
அகிலத்தையும் ஆட்சி செய்கிறதாம்
அல்லல் படும் தமிழினத்தை அரவணைக்க
உங்களுக்கெல்லாம் ஏன் ஓர் மனம் வரவில்லை
அகதிகளாய் நாம் இன்று ஓடி வருவதற்கு
அத்திவாரம் இட்டவர் நீங்கள் தானே?
இன்று எம்மை சீறுகின்ற சிங்களத்தின் கைகளுக்கே
திருப்பி அனுப்பத் துடியாய்த் துடிக்கின்றீர்
அகதி என்று நாம் வருவதனால்
எம்மை நீர் எள்ளி நகையாடலாமா?

எமக்கென்று ஓர் நாடுண்டு
அதற்கென்று ஓர் கலை உண்டு
கலாச்சாரம் உண்டு மொழி உண்டு
எல்லாமே எமக்குண்டு
மாற்றானின் அதிகாரம் நம் மண்ணில் பதிந்ததனால்
நாம் இன்று அகதி ஆனோம்
அகதிகளை ஆக்குபவர்கள் நீங்கள் ஐயா
ஆயுதம் விற்பதுவும் நீங்கள் ஐயா
சண்டைகளை மூட்டிவிட்டு
சமாதானம் செய்பவரும் நீங்கள் ஐயா
எங்களை எட்டி உதைக்க
உமக்கொன்றும் உரிமையில்லை
நமக்கென்று ஓர் நாடு வேண்டும்
வாழ்வதற்கு நமக்கு ஓர் உரிமை வேண்டும்
உரிமையை வென்றெடுக்க
உயிரையும் கொடுப்பவன் தமிழன்
தம் உயிர் காக்க தம் மழலைகளின் பயம் போக்க
அகதிகளாய் இன்று
அலை மோதி அழிகின்ற நிகழ்வுகளை
எப்படி நாம் வரவேற்போம்!

சுடுகாடாய் தமிழ் ஈழத்தை
சுட்டெரிக்கத் துடிக்கின்றான்
சிங்கள இன வெறியன்
அகதியாய் வருபவனை
அணைப்பதற்கு மறுக்கின்றான்
ஆணவம் கொண்ட ஐரோப்பியன்
அகதியாய் வரும் உன்னை
எப்படி நாம் வரவேற்போம்?

2 comments:

Anonymous said...

Well,

If our so called Father land had anyone with backbone we wouldn't have to worry about this mess. Fortunately, we have LTTE. We will have our turn when India would want our help.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வேதனையை, துயரை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது இரு பதிவுகள் உங்கள் பார்வைக்கு.


http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html

http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_04.html

அன்புடன்,
ஜோதிபாரதி.