Monday, January 21, 2008

அவனைத் தேடுகிறேன்

அவனைத் தேடுகிறேன்
எல்லா இடங்களிலும்
களைத்து ஓய்ந்து விட்டேன்
காணவில்லை எவ்விடமும்
எங்கே அவன்?
எப்படித் தொலைந்தான் அவன்?
அழுத கண்களுடன் கேட்டேன்
அவன் அம்மாவை
கண்டீர்களா அவனை?
கலங்கிய கண்களுடன் சொன்னார்
இல்லை என்றே!
அங்கும் இங்கும் ஓடி ஓடி
தேடினேன் அலுக்காமல்
ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது எனக்கு
கேட்டேன் அவன் மனைவியிடம்
கண்டீர்களா அவனை?
அழுகையும் சோகமும் ஒன்று சேர
சொன்னாள் அவளும்
அதே பதில்தனையே
வருவோர் போவோர் அனைவரையும்
கேட்டே அலுத்து விட்டேன்
நானாக அவனைக் கண்டுபிடிக்க
சபதம் எடுத்தேன் முடிவாக...

பழைய நினைவுகள்
புதிதாய் எழுந்து வர
மீட்டேன் என் நினைவுகளை
அன்று......
அவனும் நானும் இனிய நண்பர்கள்
துடிப்புள்ள இளையனாய் அவன் இருந்தான்
துன்பம் வந்ததென்று யார் சொன்னாலும்
துயர் துடைக்கப் புறப்படுவான் உடனேயே
துஸ்டரைக் கண்டால்
எட்டி உதைத்திடுவான் காலாலே
அநியாயம் செய்பவரை
அஞ்சாமல் கேட்டிடுவான்
இதுவென்ன நியாயமென்று
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரை
உரக்கப் பேசியே விரட்டி அடித்திடுவான்
பெரியோரை மதித்திடுவான்
சிறியோரை அணைத்திடுவான்
நல்லவரைப் போற்றிடுவான்
நயவஞ்சகம் செய்வோரை நையப் புடைத்திடுவான்
இருப்பதே போதுமென்று
ஆண்டவன் கொடுத்ததே அதிகமென்று
அகமகிழ்ந்து வாழ்ந்திருந்தான்
நண்பர்கள் எல்லோர்க்கும்
அவன் நல்லதோர் வழிகாட்டி
உயிரையும் கொடுக்கத் துணிந்திடுவான்
தன் நண்பரைக் காப்பதற்காய்
அவன் அன்று வாழ்ந்த வாழ்க்கை அது....

இன்று....
இவற்றையெல்லாம் எங்கோ தொலைத்துவிட்டு
இருக்கின்றான் இதயமில்லா மனிதனாய்
மற்றவரின் துன்பத்தில்
குளிர்கிறது அவன் மனது
அடுத்தவரின் இன்பத்தில்
எரிகிறது அவன் வயிறு
அநியாயம் செய்பவரைக் கண்டால்
அலாக்காகத் தட்டிக் கொடுத்திடுவான்
மற்றவரின் சுகம் கண்டு
புழுங்கிடுவான் தன் மனத்துள்ளே
நாசமாய்ப் போகவேண்டும் இவனென்று
மனத்துள்ளே வேண்டிடுவான் ஆண்டவனை
கூடியிருந்தே கழுத்தறுப்பான் கூதுகலமாய்
நல்லவனாய் நண்பனாய் நடித்தே
செய்திடுவான் நம்பிக்கைத் துரோகமதை
உதவிகள் பெறுமட்டும்
நடிப்பான் உத்தமன் போல் நல்லாக
பின் சொல்லால் அடித்தே
கொன்றிடுவான் அவர் தம் இதயமதை
எல்லாம் இருந்தும்
ஆற்றாமை மேலோங்க
இன்னும் வேண்டும் என்றே
நொந்திடுவான் ஆண்டவனை

என்ன ஆயிற்று அவன் மனத்திற்கு
ஏன் ஆனான் இப்படியாய்
அவன் உள்ளம் தொலைந்ததனால்
உற்றோரும் மற்றோரும் தேடுகிறார்
என்போல்....அவனை எந்நாளும்
புரிந்து கொண்டேன் இப்போது
நான் தேடியது அவன் உடலையல்ல
அவன் உள்ளத்தை
தொலைத்துவிட்ட அவன் உள்ளத்தை
உணர்வுகளை அவன் மீளப் பெறுவதற்காய்
முயன்றிடுவேன் இப்போதே
அவனைக் கண்டுகொள்வேன் அவனுள்ளே
அன்றிருந்தபடியே.........

No comments: