Tuesday, June 17, 2008

என்னை நான் தேடுகிறேன்

தாயகத்தில் அன்று நான்
நானாக இருந்தேன் மகிழ்வாக
இன்று புலம் பெயர்நாட்டில்
நான் நானாக இல்லை என்பதனால்
என்னைத் தேடுகிறேன் என்னாளும்
வேறு சிலருக்காய் வாழ்கின்றேன்
இங்கே புதிய மனிதனாய்
மனிதப் பண்புகளை
மதித்தார்கள் அங்கே
மனிதன் பணப்பையை
மதிக்கிறார்கள் இங்கே
அதனால் என்னையே நான்
மாற்றிக்கொண்டேன் இவர்களுக்காய்
இப்போ தேடுகிறேன் என்னையே நான்!

Monday, June 16, 2008

ராணுவத்தின் வேட்டுக்கள்

பசியும் பட்டினியும்
கொலையும் கொள்ளையும்
கடத்தலும் கப்பம் கேட்டு மிரட்டுவதும்
வான்குண்டுத் தாக்குதலும்
கிளைமோரின் வெடிப்புகளும்
அகதியாய் இடம் பெயர்வுகளும்
அநியாயச் சாவுகளும்
இவையே எம் மண்ணில்
அன்றாட நிகழ்வுகளாய் ஆனபோதும்
விடிந்த பொழுதில் விழித்தெழுந்து
அல்லும் பகலும் அயராதுழைத்து
அம்மாவையும் அக்கா தங்கையையும்
அரணாகக் காத்து நின்ற
சின்னஞ் சிறுவனையும்
விட்டு வைக்கவில்லை
ராணுவத்தின் வேட்டுக்கள்.

Thursday, May 1, 2008

தலித்துக்கள் விடுகின்ற கண்ணீர்

கண்ணீர் சொல்லும் கதைகள்
கவிதைகளாய் வெளிவந்தால்
காலத்தால் அழியாத
காவியங்கள் பல மலர்ந்திருக்கும்
அவை கதைகளாய் வெளிப்பட்டால்
உலகையே வியக்க வைத்திருக்கும்

தண்ணீர்ப் பஞ்சம்
தமிழ் நாட்டில்
தலைவிரித்தாடுவதால்
விவசாயிகள் கண்களிலே
கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது
அயல் மானிலத்தார்
தண்ணீர் கொடுக்க மறுத்தாலும்
எம் உழவர் துன்பத்தில்
பொழிகின்ற கண்ணீர்
நம் மண்ணில் சொரிவதனால்
விளையும் பயிர்கள் என்றே
நம்பிடுவோம் திடமாக!!!

ஆதி மனிதனையும்
வெட்கித் தலை குனிய வைக்கின்ற
சாதீயம் பேசி
குழி தோண்டிப் புதைக்கின்றார் நாகரீகத்தை
என்ன கொடுமை இது
தமிழ் நாட்டினிலே
தர்மம் செத்தது எப்போது?
ஊரின் நடுவே பெரும் சுவர் எழுப்பி
பிரித்து வைக்கின்றார் தலித் மக்களையே
கலக்கத்தில் தலித்துக்கள்
விடுகின்ற கண்ணீர்
உடைத்துவிடும் அச்சுவரை
பெற்றிடுவார் உரிமைதனை
நம்பிடுவோம் திடமாக!!!

Monday, April 14, 2008

வாழ்க்கை

மனித வாழ்க்கை
மாயத்தில் மட்டுமே நடக்கிறது
நடிக்கிறார்கள் எல்லோரும் நல்லாவே
காதல் இல்லையேல் சாதல்
புலம்பிடுவார்
தம் காம இச்சைகளைத் தீர்ப்பதற்காய்
ஈருடல் ஓர் உயிர் என்றே
வாழ்ந்திடுவார் கணவன் மனைவியுமாய்
அதில் ஒருவர் இறந்திட்டால்
அடுத்த கல்யாணம் செய்வதற்காய் துடித்திடுவார்
எல்லாமே நாடகம்தான்

மக்களுக்குச் சேவை செய்கிறேன் பார் என்று
சேகரிப்பார் வாக்குக்கள் நல்லாவே
வென்றிடுவார் தேர்தலிலே
ஆகிடுவார் மந்திரியாய்
மறந்திடுவார் அம் மக்களையே
ஊழல்கள் புரிந்தே
உல்லாச வாழ்க்கை வாழ்ந்திடுவார்
எல்லாமே நாடகம்தான்

மகிழ்வாய் இருப்பதாய்
தம்மையே ஏமாற்றி
வாழ்ந்திடுவார் பல பேர்
புலம் பெயர் நாட்டினிலே
இரண்டு வேலை செய்திடுவார்
வீட்டுக்கடன் வட்டியைக் கட்டிடுவார்
மிகுதி ஒன்றும் இல்லாமல்
அல்லல் பட்டிடுவார்
வசதியாய் இருப்பது போல்
நடித்திடுவார்
எல்லாமே நாடகம் தான்

உள்ளே அழுகின்ற
ஆயிரம் ஆயிரம் எம்மவர்கள்
வெளியே சிரித்தபடி
உலாவருகின்றார் மற்றவர்க்காய்
உலகமே நாடக மேடை
சொன்னார்கள் பெரியவர்கள்
நடிக்கின்றோம் நாம் எல்லாம்
எல்லாமே நாடகம் தான்

Wednesday, April 2, 2008

குரும்பசிட்டி

என் உள்ளத்தின் உணர்வுகளை
இதயத்தின் அதிர்வுகளை
சுவாசத்தின் மென்மையினை
அள்ளித் தெளித்திட்ட
என் ஊரின் காற்றை
சுவாசிப்பதற்காய்
ஏக்கமுறும் எம்மவர்க்கு
ஊர்க்காற்று வீசுகின்ற
தென்றல் மாலைப் பொழுது இது
மகிழ்வாய் நாம் எல்லாம்
கூடி நிற்கின்றோம் கூட்டுக் குடும்பம் போல்
உள்ளத்தின் உணர்வுகளை
துடைத்தெறிய முற்பட்டு
முடியாமல் போனதினால்
கூடி இங்கு எம் உணர்வுகளை பகிர்கின்றோம்
எம் இதயத்தின் அதிர்வுகள் ஒவ்வொன்றும்
எம் ஊரின் கதை பேசும்
எம் சுவாசத்தின் ஒவ்வோர் மூச்சும்
எம் ஊரின் மூலை முடுக்கெல்லாம்
சுற்றிச் சுழன்று வரும்


என் பசுமையான நினைவுகளில்
பதிந்திருக்கும் இனிமைகளை
அள்ளிக்கொடுத்த என் அருமை ஊரே
என் இதயத்தின் ஒவ்வோர் அணுக்களிலும்
உன் நினைவே
குடிகொண்டிருக்கும் எந்நாளும்
குரும்பசிட்டி என்றதுமே
கூதுகலம் தாங்கமுடியாது
எம் ஊரவற்க்கு
சிறிய ஊர் என்றாலும்
சிங்கப்பூர் என்றே சொல்லிடுவார்
எம் ஊரை மற்றையோர் எல்லாமே
பெருமிதம் மேலோங்கும் எம்மவற்கு
அழியாத எம் ஊரின் நினைவுகளை
எம்மவர் இதயங்கள்
எந்நாளும் சுகமாய் சுமந்து நிற்கும்
சிறியதோர் கிராமமாய்
சிங்காரச் செழிப்புடனே
அயலவரை அங்கலாய்க்க வைத்தாயே
என்ன இல்லை எமதூரில்?
அழகான வீடுகளும்
அளவில்லாத் தோட்டங்களும்
மின் விளக்கின் ஒளியினையே
எல்லோர்க்கும் முன்னமே நாம் பெற்றோம்
வீதி ஓரமெங்கும் பசுமை செளித்திருக்க
மதில்களெல்லாம் தொடராய்
விரிந்து செல்லும்...
ஐந்தாறு கோவில்கள்
அடுக்கடுக்காய் சூழ்ந்திருக்கும்
அழகான கோபுரங்கள்
அதற்கு இன்னும் மெருகூட்டும்
அழகான அம்மன் கோவில் தேரை
அண்ணார்ந்து பார்த்தே
அகமகிழ்வோம் நாம் எல்லாம்
அயலூரவர்கள் எல்லாம்
எம் கோவில் நோக்கிப் படையெடுப்பார்
அருள் புரிவார்
எம் அம்மாளாச்சியுமே அற்புதமாய்

பத்தாம் வகுப்புவரை பாடசாலை
ஐந்தாறு சங்கங்கள்
அனைத்துக்கும் கட்டிடங்கள்
படித்தோரின் எண்ணிக்கை
பலத்தைக் கொடுத்தது எம்மூருக்கு
கலைகளுக்குப் பெயர் எடுத்த
பெரியார்கள் வாழ்ந்தார்கள்
எமதூரில்
பெருமை சேர்த்தார்கள்
அகிலமெங்கும் குரும்பசிட்டிக்கே!

இளமையின் காலத்தை
இனிய எம் மண்ணில் களித்ததற்காய்
சொல்கின்றேன் நன்றிதனை
எந்நாளும் கடவுளிற்கே
இன்னும் ஓர்முறை
எம் மண்ணை முத்தமிட்டால்
மனத்தின் சுமையெல்லாம்
பஞ்சாய்ப் பறந்துவிடும்

எம் அப்பாவும் அம்மாவும்
அவர்தம் பெற்றோரும்
பிறந்து வளர்ந்து
பூரிப்பாய் வாழ்ந்த பூமி அது
எமக்கல்லோ சொந்தமது
எமக்கல்லோ சொந்தமது!
எம் கண்களெல்லாம்
கண்ணீரைக் கொட்டிநிற்க
பகை கொண்டு வெறி கொண்டு
எமதூரை ஏன் பறித்தாய்
ராணுவமே?

அரசடிச் சந்திக்கும்
அம்மன் கோவிலிற்கும்
மணிக்கடைப் படிக்கட்டிற்கும்
மாறி மாறி ஓடிய நாட்கள்
மனதினை விட்டகல
மறுத்தே நிற்கிறது
அயலூரார் மெச்சுகின்ற
அருமையான ஊரெனவே
பேரெடுத்தாய் சிறப்பாக
அடிபிடி சண்டைக்கு
போகமாட்டார் எமதூரார்
அள்ளிக் கொடுக்கின்ற வியாபாரத்தில்
நீ என்றுமே முன்னணியில்

இனிய இளமைப் பருவத்தே
நாமெல்லாம்
கூடிக் கும்மாளம் அடித்த காலங்கள்
விடலைப் பருவத்தே பெற்ற நண்பர்கள்
காலத்தால் அழியாத அவ் நினைவலைகள்
சந்தியிலே நாமிருந்து போட்ட சத்தங்கள்
நக்கலடித்துப் பாடிய பாட்டுக்கள்
மாங்காய் தேங்காய்
மதிலேறிப் பறித்த அநுபவங்கள்
கள்ளமாய்ப் பார்த்து
காதலுக்காய் ஏங்கிய காலங்கள்

எம் ஊரின் ஒவ்வோர் மூலையும்
எம் கதை சொல்லும் வாயிருந்தால்
இன்னும் ஓர் முறை
எம் ஊரில் கால்பதிக்க
கடவுளே கருணை காட்ட மாட்டாயா?
கல் நெஞ்சு ராணுவத்தை
எம் ஊரை விட்டு
துரத்தி அடிக்க மாட்டாயா?

இந்தக் கவிதை எம் ஊரவரின் ஒன்றுகூடல் நிகழ்வான ஊர்க்காற்று நிகழ்வின் போது என்னால் வாசிக்கப்பட்டது.

Wednesday, March 12, 2008

கனவைத் திருடாதே

ஆழ்ந்த உறக்கத்தில்
நான் இருந்து
அலை அலையாய்
காணும் சுகமான கனவுகளை
என்னவளே
உன்னுடன் விழித்திருப்பதனால்
தொலைத்துவிட்டேன் இன்றளவும்
இனியும் திருடாதே
என் இன்பக் கனவுகளை
உறங்கவிடு நிதர்சனமாய் நிம்மதியாய்
என் கனவுகள் வேண்டும் எனக்கு
கனவின் மகிழ்ச்சி நிஜத்தில் இல்லை
உணர்வாயா என் காதலியே!

Friday, March 7, 2008

சர்வதேசமே உன் கண் திறக்கவேண்டும்

அன்பாய் உமை வளர்த்தோம்
ஆருயிராய் உமை நினைத்தோம்
ஆண்டவன் தந்த கொடையெனவே
உமை மதித்தோம்
குழந்தையாய் நீவிர்
இவ்வுலகில் வந்துதித்தபோது
குடும்பமே குதித்தெழுந்து
சந்தோசம் கொண்டாடி மகிழ்ந்திற்று

உம் மழலைச் சொல் கேட்பதற்காய்
மணிக்கணக்காய் தவம் கிடப்போம்
நடைபயில வைத்திடுவோம்
நடு வீட்டை வெளியாக்கி
ஓடி விளையாட
மைதானம் அமைத்திடுவோம்
சீராட்டித் தாலாட்டி
சிறப்பாய் வாழ்ந்திருப்போம்

நாம் பட்ட கஸ்டங்கள்
எம் பிள்ளைகள் படக் கூடாதென்றே
பகலென்றும் இரவென்றும்
வேலைகள் செய்திடுவோம்
அ- சொல்லிக் கொடுத்திடுவோம்
ஐந்து வயதாகுமுன்பே
ஆங்கிலமும் புகுத்திடுவோம்
அகிலமும் சென்று வரவேண்டுமென்றே
பாடசாலைக் அனுப்பிவிட்டு
படலையில் காவல் காத்து நிற்போம்
பள்ளி முடிந்ததுமே
பக்குவமாய் அணைத்தெடுத்து
பசிக்குதா கண்ணே என்று
பவ்வியமாய் வினாத் தொடுத்து
பல் சுவையாய் உணவும் ஊட்டிடுவோம்

குழந்தையாய் இருந்தவர் நீர்
இளைஞராய் வளர்ந்துவிட்டீர்
வாழ்வில் இனி எமக்கும்
வசந்தம் தான்
படிப்பார்கள் எம் பிள்ளைகள் வடிவாக
பட்டம் பெறுவார்கள் சிறப்பாக
ஊருக்கும் உதவிடுவார்
எமக்கும் பெருமை சேர்த்திடுவார்
பெற்றோர் எம்முள்ளே
கனவுகள் ஓடி வரும் எந்நாளும்

பாழாய்ப் போன குண்டுச் சத்தம்
கனவுகளை ஒரு நொடியில் கலைக்கிறது
ஏன் வளர்ந்தாய்
என் மகனே! என் மகளே!
பொல்லாத சிங்கள ராணுவம்
உமை போட்டுத் தள்ளப் பார்க்கிறது
வெள்ளை வானில் வருகின்ற
புலனாய்வு எமதர்ம ராயாக்கள்
எம் பிள்ளைகளை
கடத்திக் கொலை செய்கின்றார்
வானில் இருந்தே கொட்டுகின்ற குண்டுகளால்
உம் வாழ்வையே குழி தோண்டிப் புதைக்கின்றார்

எம் பச்சைப் பிள்ளைகள்
நம் கண் முன்னே
கடத்தப் படுவதும்
கண்மூடித்தனமாய் சுடப்படுவதும்
கண்டும் தாங்குமா எம் இதயங்கள்?
சித்திரவதைக் கூடங்களான
சிறீலங்காவின் சிறைக்கூடங்களில்
எம் சின்னஞ் சிறிசுகள்
அடைபட்டுக் கிடக்கையில்
தூங்குமா எம் இதயங்கள்?

இந்த வாழ்விற்கு
விடிவொன்று வேண்டும் விரைவாக
இழப்புக்கள் போதும் இனி
சர்வதேசமே உன் கண் திறக்கவேண்டும்
தமிழன் உரிமையை மதிக்கவேண்டும்
எம் பிள்ளைகள் வாழ்வு சிறக்கவேண்டும்!