Thursday, February 21, 2008

புலம்பெயர் வாழ்வு

நாட்டிலே நடந்தவைகள்
மனதை வதைத்ததனால்
புலம் பெயர்ந்தோம் நாம் எல்லாம்
நாம் உண்டு நம் வேலை உண்டு
என்றிருந்தோம் மகிழ்வாக
வேலையைப் பறித்தீர்
மாவட்ட அடிப்படை என்றே
கல்வியைப் பறித்தீர்
தரப்படுத்தல் என்றே
எம்மவர் வர்த்தகத்தைப் பறித்தீர்
இனக் கலவரம் செய்தே
பொறுமையாய் இருந்தவர்
போர்க் கொடி உயர்த்தினர்
மரணம் என்பது
மலிவாய்ப் போனது நம் மண்ணில்
வந்தோம் நாமும் புலம்பெயர்ந்தே
வழமான வாழ்வு வாழ்வதற்கே!

கூட்டல் பெருக்கல் படிப்பித்த
கந்தசாமி மாஸ்ரர்
இங்கே கூட்டிப் பெருக்கும்
வேலையிலை குளிருக்கை நிற்கிறார்
வைத்தியராய் வேலைபார்த்த
வைரமுத்து இங்கே
இறைச்சிக் கடையில்
வெட்டுகிறார் ஆட்டு இறைச்சியினை
துண்டு துண்டாய்
எக்கவுண்டர் ஏகாம்பரம்
எண்ணி எண்ணிக் கழுவுகிறார்
கோப்பைகளை றெஸ்ரோறன்ரிலே
இவர்களுக்கெல்லாம்
நாட்டிலே வேலைசெய்த நேரங்கள்
நினைவில் வர
அழுகை தானாக ஓடிவரும்

கிரைண்டரும் மிக்சியும்
கேட்ட பெண்களெல்லாம்
இங்கே
அம்மியும் ஆட்டுக்கல்லும்
உரலும் உலக்கையும்
வேணுமெண்டு அடம்பிடிக்கின்றார்
சமையல் செய்வதற்கு
தலையில் கைவைத்தே
செய்திடுவார் ஆண்களெல்லாம்
சமையலையே
நாட்டிலை நாம் இருந்த வேளை
கரட், லீக்ஸ்
மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு
கேட்டார்கள் பெண்களெல்லாம்
இங்கே
முருங்கை இலை வாழைப் பொத்தி
ஊர்க் கீரை, மரவள்ளிக் கிழங்கு
எல்லாம் வேணுமாம்
சமையல் செய்வதற்கு
எல்லாமே பிரச்சனை தான்
புலம் பெயர் நாட்டினிலே

போதும் இந்தப்
புலம்பெயர் வாழ்வு
எப்போ பெறுவோம்
நாம் சுதந்திரத்தை
அப்போ மீண்டும் பெயர்வோம்
ஈழத்திற்கே!!

No comments: