Sunday, February 10, 2008

தாங்குமா என் இதயம்?

வானத்தே வட்டமிடும்
பொல்லாத கழுகுகளாய்
கோளிக்குஞ்சுகளை
கொன்று தின்னவென்று
துடிக்கும் வல்லூறுகளாய்
கிபீர் விமானங்கள்
எம் மண்ணின் வானத்தின் மீதே
பறந்து வட்டமிடுகிறது
பயமும் பீதியும் நடுக்கமும்
ஒன்று சேர பதறிப் போய்
பிள்ளைகள் அம்மாவை
அரவணைக்கும் வேளை
அந்த அன்னையின் வேதனை
கண்களில் கண்ணீராய்
உள்ளத்தில் நெருப்பாய்
சொல்லில் வடிக்கமுடியா உணர்வுகளாய்
கதறலாய் வெளிப்படும் வேளை
என் இதயம் வெடிக்கிறது
தாங்குமா என் இதயம்?

இவை கொட்டுகின்ற குண்டுகளால்
சிதறி சின்னாபின்னமாகின்ற
கட்டிடங்கள் வீடுகள்
நாம் வாழ்ந்த வளர்ந்த
புனித இடங்கள் அவை
அதன் நடுவே
குற்றுயிராய் உயிருக்காய்
போராடும் குழந்தைகள்
தண்ணீர் தண்ணீர் என்று
கதறி அழ
உதவக் கூட முடியாமல்
காலைத் தொலைத்துவிட்ட
அக் குழந்தைகளின் பெற்றோர்கள்
ஆபத்துக்கு உதவ வந்த
அம்புலன்ஸ் வாகனங்கள்
ஆமிக்காரனைத் தாண்டி
ஆஸ்பத்திரிக்குப் போக ஏலாதாம்
என்ன கொடுமை இது
தாங்குமா என் இதயம்?

எமது வீதி எங்கும்
குருதி வெள்ளம்
உயிரில்லா உடலங்கள்
நாள் தோறும்
நம் கண் முன்னால்
வெள்ளை வானிலே
வருகின்ற யம தூதர்கள்
எருமை வாகனத்தை
வெள்ளை வானாக்கி
எம்மவரை மேலோகம்
கொண்டு செல்லும் பாதகங்கள்
கடத்தலும் கப்பம் வேண்டுதலும்
சுடுதலும் சுட்டுப் பொசுக்குவதும்
எம் மக்கள் வாழ்வின்
நித்திய வழமையாய்
ஆகிப் போனதை
தாங்குமா என் இதயம்?

புலம் பெயர் நாட்டில்
புகலிடம் தேடியதால்
என் நெஞ்சத்தின் சுமை
ஒன்றும் குறையவில்லை
நாள் தோறும்
கேட்கின்ற செய்திகளால்
என் மனம் இடிந்தே போகிறது
ஒவ்வோர் செய்தியும்
ஒவ்வோர் பாறாங்கல்லாய்
என் இதயத்தை
இறுக்கி அடிக்கிறது
தாங்குமா என் இதயம்?

மனத்தில் ஓர் சோகம்
என்னவென்றே புரியாத புதிராக
நான் பிறந்த மண்ணை
பிரிந்து வந்ததனால்
ஏற்பட்ட வேதனையோ?
இல்லை......
நம் மண்ணில் எம் மக்கள்
படுகின்ற துயரங்கள்
தருகின்ற வேதனையோ?
கண்களில் வழியும் விழி நீரை
துடைத்தேன் நானும் கையாலே
சிவப்பு நிறத்தில்
உதிரம் கொட்டியது விழி அதனில்
இதயத்தின் உடைவுகளின்
குருதி இதுவென்றே
உணர்ந்து கொண்டேன்.

No comments: