தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா
ஆச்சி அப்புவோடை பூட்டன் பூட்டியும்
ஒன்றாய் ஒற்றுமையாய்
இருந்தான் தமிழன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்....
அண்ணனும் தம்பியும்
அடிபிடி சண்டையில் முன்னணியில்
அக்காளும் தங்கையும் ஆளுக்காள் ஒவ்வோர் பக்கம்
அப்பாவையும் அம்மாவையும் இங்கே வரவழைத்து
அங்கே அவர்க்கிருந்த
நிம்மதியையும் நிர்மூலமாக்கி
பிள்ளை பார்ப்பதற்கும்
பிற வேலை செய்வதற்குமாய்
அவர்களை தமிழா நீ படுத்தும் பாடு
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்
இலங்கை வேந்தன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்...
கடன் கொடுத்தோர் கலங்கி நிற்கும் பரிதாபம்
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதனால்
வாங்கிக் கட்டியவர் இங்கு ஏராளம் ஏராளம்
சீட்டுக் கட்டியதால் சின்னாபின்னமான
குடும்பங்கள் எத்தனை எத்தனை
சீட்டுப் பிடித்தவர்கள் சிங்கார வாழ்க்கை வாழ்கையிலே
சீட்டுக் கட்டியோர் சித்தப் பிரமை பிடித்தே
அலைந்து திரிகின்றார்
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!
நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவன் தமிழன்
காலம் காலமாய் நட்பினைக் காத்தவன் தமிழன்
இன்றோ ஐரோப்பாவில்...
உயிர் நண்பனையே
உடனிருந்து ஏமாற்றுகிறான் தமிழன்
பணமுடையவனே பலருக்கும் நண்பன்
களவும் பொய்யும் செய்து
கனதியாய் பணம் சேர்த்தவனே
எல்லோர்க்கும் நண்பன்
கண்ணியமாய் வாழ்பவர்கள்
கவலைப்பட்டே காலத்தை தள்ளும் பரிதாபக் காட்சி
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!
பஞ்சத்தில் தான் வாழ்ந்தாலும்
அறிவுப் பசிக்கு உணவளித்தவன் தமிழன்
எளிமையாய் வாழ்ந்தாலும்
இன்பமாய் வாழ்ந்தவன் தமிழன் அன்று
இன்றோ ஐரோப்பாவில்.....
காசிருக்கும்போது கல்வி எதற்கென்கின்றான்
பணம் சேர்ப்பவனே அறிவாழி என்கின்றான்
இரவு பகல் வேலை செய்யும் கணவன்
தனிமையிலே ஏக்கமுறும் மனைவி
பெற்றோரைக் காணாது பரிதவிக்கும் குழந்தை
இதுவே சுக வாழ்வு என்கின்றான் தமிழன்
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!
No comments:
Post a Comment