Friday, November 2, 2007

கண்ணீர்த்துளிகள்

சோபாவில் படுத்திருந்து
என் எண்ணத்தை பின்னோக்கி ஓடவிட்டேன்
ஆண்டுகள் பல பின் நோக்கி
என் மனம் அசை போட்டே
எம்மவர் வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கிறது
சிறு குடிசை வீடுகளும்
விருப்புடனே செய்த விவசாயப் பூமிகளும்
காடுகளாய் வளர்ந்திருந்த இயற்கையின் வனப்புகளும்
ஒவ்வொன்றாய் என் மனத்தை தொட்டுச் செல்கிறது

புழுதி கிளப்ப புயல் போல் ஓடிடும் சயிக்கிள்கள்
பஸ் இற்காய் காத்திருக்கும் பெரியவர்கள்
பேசுகின்ற பயமற்ற ஊர் வம்புப் பேச்சுக்கள்
சமையல் முடித்தே சந்திக்கும் பெண்களின்
கலகலப்பான கதை அளப்புக்கள்
காதல் யோடிகள் பற்றி கதை கதையாய்
கிசு கிசுக்கும் இளசுகள்
வஞ்சகமே இல்லாத அந்த நிகழ்வுகள்
என் இதயத்தை கிள்ளி விடுகிறது பலமாக

ஒவ்வோர் வீட்டிலுமே ஒவ்வோர் ராயா
ராயாவும் ராணியுமாய் மகிழ்ந்தே வாழ்ந்திடுவார்
வறுமையிலும் செழுமை காணும் வளமான வாழ்க்கை
உண்மையான ஊழலற்ற அரசாங்கம்
நடப்பது அவர்தம் வீட்டில்தான்
உள்ளத்தின் உணர்வுகள் தான்
அங்கே எழுதாத சட்டங்கள்....

மகிழ்வான அந்தக் கடந்த காலம்
எங்கே தொலைந்தது அந்தக் காலம்?
எங்கே தொலைந்தார்கள்
அந்த உண்மையான மனிதர்கள்?
கண்களிலே கண்ணீர் தடை போடமுடியாமல்
கன்னத்தை ஒரு தரம் துடைத்துவிட்டு
மீண்டும் ஓர் முறை எண்ணத் தலைப்பட்டேன்

காலம் மனிதனை மாற்றுகிறதா?
இல்லை காலத்தை மனிதன் மாற்றுகிறானா?
கேள்வியொன்று எழுந்து வந்து
விடை காணமுடியாமல் விக்கித்து நிற்கிறது!
ஆண்களும் பெண்களுமாய் எத்தனை சிநேகிதங்கள்
கள்ளம் கபடமில்லா உண்மையான நேசங்கள்
அப்போ பணமும் பொருளும் பந்தாவும்
எம்மில் யாரிடமும் இருந்ததில்லை
அன்பு மட்டும் தான் அங்கே அரசாங்கம் நடாத்திற்று
பணத்திற்காய் பாசத்தை கொன்றொழிக்கும் பச்சோந்திகள்
பார்த்ததே இல்லை அன்று நாம் எம்மிடையே
உண்மையாய் உன்னதமாய் வாழ்ந்த
அந்த மனிதக் கூட்டம்
கண்களிலே இன்னுமோர் முறை கண்ணீர்த்துளிகள்
உண்மை அன்புக்காய் உத்தம நட்புக்காய்
ஏங்குகிறதோ எனது மனம்?

காலம் மனிதனை மாற்றவில்லை என்றால்
கல்லு மனம் படைத்த இந்த மனிதர்கள்
எப்படி வந்தார்கள் எங்கிருந்து வந்தார்கள்
இப் புலம் பெயர் நாட்டிற்கு?
மீண்டும் கண்ணீர்த்துளிகள்.

No comments: