அந்த பொல்லாத வெள்ளிக்கிழமை
விடியவே இல்லை
தமிழர் மனமெல்லாம் ஒரே கும்மிருட்டு
விடி காலைப் பொழுதினிலே
இடியெனவே வீழ்ந்த செய்தி
விடியலைக் கருமையாக்கி
விழிகளைக் குளமாக்கி
ஒளிதனை முற்றாய் மறைத்து
இருள்மயமாய் காட்சி தருகிறது
எம் தமிழர் மனமெல்லாம்
நிறைந்திருந்த தமிழ்செல்வன்
ஈழத்தின் தங்கச் செல்வன்
புன்னகை மாறாத புலி வீரன்
வீர மரணம் எய்திட்டான்
என்ற செய்தி கேட்டு
பதை பதைதிட்டார் ஈழத் தமிழர் எல்லாம்
ஒவ்வோர் தமிழனின் இதயமும்
ஓர் கணம் அசைவற்று நின்றே
தன் இயக்கத்தை தொடர்ந்தது
புலம் பெயர் நாட்டில் எம்மவர்
நம்ப மறுத்தார் இச் செய்தியினை
கண்களில் ஓர் துளி கண்ணீர்
கொட்டவில்லை எனக்கு
என் கைகள் ஒரு வரி கவிதை
வடிக்கவில்லை இன்றுவரை
மனம் ஓர் வெறுமையாய்
உணர்வற்றுக் கிடக்கிறது
நம்ப மறுக்கிறது எனது மனம்
எப்படி நம்புவோம் நாம் இதனை
இப்போதும் எம் கண் முன்னால் அந்தப் புன்சிரிப்பு
அழகாய் வந்து நிற்கிறதே
போர் புரிய வக்கில்லா
பொல்லாத சிங்கள இனவெறியன்
சமாதானம் முன்னெடுத்த
எம் தமிழர் மனமெல்லாம்
இரண்டறக் கலந்துவிட்ட
எம் தமிழ்செல்வன் உயிர் குடித்திட்டான்
குண்டுகளை வீசியே வஞ்சனையாய் .....
அப்பாவித் தமிழர் உயிர் ஆயிரம் ஆயிரமாய்
பலி எடுத்த குண்டுகளால்
இன்று சமாதானத்தின் முதல்வனையே
சாகடித்தீர் உம் வெறி தீர
அக்கிரமம் கொண்டவரே
திண்ணமாய்ச் சொல்கின்றேன்
விலை கொடுப்பீர் பெரிதாக
எங்கள் தலைவன் இதயத்தின்
ஓர் பாதி தமிழ்செல்வன்
எப்படித் தாங்கிடுவோம்
உன் மறைவை
என்றும் மாறா எம் செல்வன் புன்சிரிப்பு
இனி எப்போ காண்பார் எம் தமிழர்
உலகெங்கும் சுற்றி வந்தாய்
உன்னதமாய் சமாதானம் பேசி வந்தாய்
புலம் பெயர் தமிழருடன்
ஈழத் தமிழர் பாசத்தை பகிர்ந்தளித்தாய்
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வாக மீழாது உறங்குவதை
எப்படித் தாங்கிடுவார் எம் தமிழர்
எழுந்து வர மாட்டாயா எமக்காக?
ஈழத் தமிழர் அழுகையின் ஓலம்
அகில உலகெங்கும் பட்டுத் தெறிக்கிறது
புலம் பெயர் தமிழர்கள்
செய்வதறியாது தவிக்கின்றார்
தமிழ் நாட்டுத் தமிழர்கள்
கோவம் கொதிப்பேறி அனல் கக்குகின்றார்
உலகப் பந்தின் சமாதானம் விரும்பிகள்
தம் உள்ளம் கொதிக்க திகைக்கின்றார்
சிங்கள இன வெறியன்
இன்னுமோர் முறை
காட்டுமிராண்டிகள் தாமென்று
உலகிற்கு பறை சாற்றி நிற்கின்றார்
ஊன்று கோலால் ஊன்றி நடக்கும்
எம் இனியவனே
தமிழரின் நல்வாழ்க்கைக்காய்
நீ தாங்கிய வலிகள் எத்தனை? எத்தனை?
நீ பட்ட விழுப்புண்கள்
வேதனை தந்தனவா எம் செல்வா?
எல்லாம் தாங்கினாயோ எமக்காக?
உன் உள்ளத்தின் மென்மையினை
அறிவார் நம் தமிழர்
இருபத்திநான்கு ஆண்டுகளாய்
உளைத்தாய் எம் மண்ணின் விடுதலைக்காய்
புன்னகை மாறாத முகத்துடனே
புரிந்திட்டாய் அரசியல் பணிதனையே
உனைக் கொன்றார்
புத்தரின் புதல்வர்கள்
எரிமலையாய் கொதிக்கிறது
தமிழர் நெஞ்சம்
நீ சண்டையிலே வீரன்
அரசியலில் வெகு சூரன்
அறிவார் எதிரியெல்லாம்
எமைவிட மேலாவே
எல்லாளன் நடவடிக்கை
துட்டரையும் துட்டகைமுனுவின் கொட்டத்தையும்
துடைத்தெறிந்த நேரத்தில்
கோழைகள் துஸ்டர்கள்
எம்மைக் கொதிப்படைய வைக்கின்றார்
புத்தரின் தருமத்தை குழி தோண்டிப் புதைப்பவர்கள்
குண்டு வீசிக் கொன்றுவிட்டார் வஞ்சனையாய்
நீ போட்ட குண்டு தகர்த்தெறிந்தது
சமாதானத்தின் வழிமுறையை
சர்வதேசம் போடுகின்ற சத்தங்கள்
இனியும் எம்மை பணிய வைக்கமுடியாது
புரியவைப்பார் எம் புலி வீரர்
தானைத் தலைவன் இருக்கின்றான்
தமிழ் ஈழம் வெல்வோம் உறுதி இது
பிரிகேடியர் தமிழ்செல்வன் ஆத்மா
சாந்தி அடையும் நிட்சயமாய்
மாவீரர் வீரசொர்க்கத்தில்
வரவேற்கக் காத்திருக்கின்றார்
அங்கிருந்தே பார்ப்பாய் தமிழ் ஈழம் மலர்வதனை.
No comments:
Post a Comment