மறக்க முடியுமா
எம் ஊரின் மணிகடைச் சந்தி
எம் இளமை பருவத்தை
இனிமை ஆக்கிய
இதய பூமி அது
தொட்டு வணங்குகிறேன்
சந்தியின் அந்தப் படிக்கட்டை
கட்டையில் நான் போனாலும்
அச் சந்தியைக் கடந்தே
என் உடல் போகவேண்டும்
என்றொரு ஆசை
பாழும் சிங்கள ராணுவம்
எம் மண்ணை விட்டகன்றால்
இன்னும் ஓர் முறை
அந்தப் படியின் மடியில்
ஆற அமர்ந்திருந்து
அரட்டை அடிக்க ஓர் ஆசை
கூடியிருந்து கும்மாளம்
அடித்தவைகள்
இப்போதும் மனதைக் குளிரவைக்கும்
பாடிய பாட்டுக்கள்
எத்தனை எத்தனை
வீதியால் போவோரை
வித விதமாய் விமர்சிப்போம்
"ஒரு பின்னலை முன்னே விட்டு
பின்னிப் பின்னிப் போகிறா"
"கன்னம் கறுத்த குயில்
நிறத்தவளே"
கலகலப்பாய் கழியும்
ஒவ்வோர் நொடிப் பொழுதும்
காசிருந்தால் மணிகடையில்
வடை ஒன்றும் தேநீரும்
வாங்கிக் குடிப்போம்
வருசம் முப்பது போனாலும்
அதைப் போலொரு தேநீர்
அகிலத்தில் ஆருக்கும் கிடைக்காது
தனியாகக் குடிக்கமாட்டோம்
தாகம் எடுத்தாலும்
காசுகளை ஒன்று சேர்த்து
கணக்குப் பார்த்து
எல்லோரும் ஒன்று சேர்ந்தே
பருகிடுவோம் ஒற்றுமையாய்
முதல் நாள் பண்ணிய வம்புகள்
முழுக்க வரும் மணிகடைச் சந்திக்கே
இளநீர் மாங்காய் பறித்தவைகள்
இளசுகளின் காதல் கிசு கிசுக்கள்
கள்ளடித்தோர் விபரங்கள்
எல்லாம் கடித்தெடுப்போம்
அதில் ஓர் சுகமுண்டு
எம் இளமைப் பருவத்தை
இனிமை ஆக்கிய
அந்த புனிதமான சந்தி
இளையோர் பெரியோர் முதியோர்
எல்லோரும் சமத்துவமாய்
அமர்ந்திருந்து சந்தோசமாய்
கதை பகிரும் அந்தப் படிக்கட்டு
இதயத்தை விட்டு
என்றும் அகலாது விலகாது!
No comments:
Post a Comment