Thursday, May 13, 2010

ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும் - ஐரோப்பாவில் போராட்டம்


போதும் போதும் பொறுத்தது போதும்

ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும்

பொங்கி எழு ஆண்மகனே

சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே

இழந்த உன் உரிமையை வென்று எடுக்க

பொங்கி எழு ஆண்மகனே


அன்று நீ சமையல் அறையை எட்டியும் பார்க்கவில்லை

இன்றோ சமையலிலே நீதான் முன்னணியில்

சட்டி பானை என்றால் என்னவென்றே தெரியாமால் நீ இருந்தாய்

இன்றோ சட்டி பானை கழுவுவதில்

நீதான் முதன்மையாய் இருக்கின்றாய்

டிஸ்வோசர் வேண்ட நீ முயற்சி எடுத்திட்டால்

பெண்ணோ அதை தட்டியே கழித்திடுவாள்


ஆண் சிங்கமாய் அன்று நீ இருந்தாய்

இன்றோ அடுப்பூதும் சுண்டெலியாய் நீ இருக்கின்றாய்

அம்மாவின் கையாலே அறுசுவையும் நீ உண்டாய்

இன்றோ ஐரோப்பாவில் அடுப்படியில் நீ வெந்தே சாகின்றாய்

ஆண்கள் கட்டாயம் சம உரிமை பெற்றே ஆகவேண்டும்

சமையலிலே பெண்ணும் சரி பாதி பங்கு வகித்தே தீரவேண்டும்


அன்று அம்மா அம்மா என்று தான்

அழுதன பிள்ளைகள் எல்லாமே

இன்று அப்பா அப்பா என்று அழுவது ஏனோ

பிள்ளைப் பராமரிப்பில் பெண்களுக்கும்

சம பங்கு தந்தே தீரவேண்டும்

பத்து மாதம் சுமப்பது பெண்களென்றால்

பின்வரும் பத்து வருடங்களும்

ஆண்களா பிள்ளைகளைச் சுமக்கவேண்டும்


சம்பளம் வந்தவுடன் சட்டையும் சீலையும்

வேண்டத் திரிகின்றார் பெண்களெல்லாம்

ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்

அவர்களையும் மனிதர்களாய் மதிக்கவேண்டும்

அவர்களுக்கும் உடுபுடவை வேண்ட சம உரிமை வேண்டும்

கோட்டும் சூட்டும் வேண்ட அவர்களுக்கும்

நீ பணம் கொடுக்கவேண்டும்


விருந்தாளிகள் வீட்டுக்கு வருவதென்றால்

அன்று அடுப்படியில் நிற்பதெல்லாம்

ஆண்களாய் இருப்பது முற்றாக மாறவேண்டும்

விருந்தாளிகளுடன் கதை அளப்பதெல்லாம் பெண்களென்றால்

வேலை செய்வதெல்லாம் ஆண்களா

பொங்கி எழு ஆண்மகனே!

சரி பாதி உரிமைக்காய்

இன்றே போர்க்கொடி உயர்த்திடுவாய்


நகை நகையாய் வேண்டி நம் பணத்தை எல்லாம்

கழுத்திலும் கையிலும் பொத்திப் பொத்தி

வைத்திருக்கும் பெண் அவளே

ஆணுக்கும் ஆசைகள் உண்டென்று

நீ என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா

இன்றே அரைவாசி நகையை பெறுமட்டும்

போராட்டம் நடாத்திடு ஆண்மகனே!


அரைப் போத்தல் தண்ணி அடித்திட்டால்

அநியாயம் முழுக்க ஆண்தான் செய்திட்டான்

என்று பிதற்றுகின்ற பெண்ணே

நீ வேண்டும் சாறிக்கும் நகைக்கும்

அழகுசாதனப் பொருளுக்கும்

யார் தருகின்றார் பணம்

அளவாய் தண்ணி அடிப்பதற்கு

ஆண்கள் கட்டாயம் உரிமை பெற்றே ஆகவேண்டும்!


ஆணுக்குச் சமத்துவம் வேண்டி

ஐரோப்பிய நாடெல்லாம்

மூலை முடுக்கெல்லாம்

ஆண்கள் போராட்டம் நடாத்தவேண்டும்


சீறுகின்ற பெண்ணை

வீட்டில் நீ ஓர் சிரிப்பால் மழுப்புவதை

நான் நன்கறிவேன்

இழந்த ஆணின் உரிமைகளை

அகிம்சையால் வென்றெடுக்க

ஒன்று பட்டுப் போராடி வெற்றி பெறவேண்டும் நீ

உன் போராட்டம் வெற்றி பெறும்

பெண்ணுடன் சமத்துவமாய்

ஆணே கட்டாயம் நீ வாழ்ந்திடுவாய்!

குரும்பையூர் பொன் சிவராசா

நேர்த்தியான, உடனடிச் செய்திகளுக்கும், சிறந்த கவிதைகள் மற்றும் நகைச்சுவை என்பவற்கிற்கும் www.tamilsworld.net என்ற இணையத்தளத்தை பாருங்கள்

No comments: