சுப்பற்ரை பெட்டைக்கு சுண்ணாகச் சந்தைக்குப் பக்கத்தில்
பெரிய பந்தல் போட்டு கோலாகலக் கல்யாணம்
அக்கம் பக்கத்தார் உற்றார் உறவினர் யாவர்க்கும்
இது ஓர் பெரிய கொண்டாட்டம்
சுப்பற்ரை சரசுவுக்கு இப்போதான் இதமான பதினெட்டு
சுகமான லண்டன் கனவுகளில்
வளமான வாழ்க்கைக்காய் ஏங்கித் தவங்கிடந்தாள்
அத்தானின் காரினிலே அகலமான லண்டன் றோட்டினிலே
மாலை வேளைகளில் மணிக்கணக்காய் ஓடித்திரியவேண்டும்
அறிந்தவர் தெரிந்தவர் வீட்டிற்கெல்லாம்
அடிக்கடி விசிட் போகவேண்டும்
அட்டகாசமாய் லண்டனைச் சுற்றி
பல றவுண்டுகள் அடிக்கவேண்டும்
கடைகளெல்லாம் ஏறி இறங்கி
அத்தானின் காட்டினிலே கன சாமான்கள் வேண்ட வேண்டும்
இரவினில் அப்பிடி இப்பிடியான படங்களைப் பார்த்துவிட்டு
அளவில்லாமல் நித்திரை கொள்ளவேண்டும்
எண்ண அலைகள் சிறகடிக்க
அமைதியாக அமர்ந்திருந்தாள் சரசு
இரண்டு கூட்டம் மேளம் சக்கை போடு போட
பலகாரத்தட்டுக்கள் அங்கும் இங்கும் பறக்க
சூடான தேநீரை எல்லோரும் சுவைத்து அருந்த
லண்டன் மாப்பிள்ளை லங்காதரனின்
ஆள் உயரப் போட்டோ பந்தலிலே கம்பீரமாய் நின்றிருக்க
மாப்பிள்ளை வீட்டார் மலர்மாலை சகிதம்
மகிழ்ச்சியுடன் மணப்பந்தலுக்கு வருகின்றார்
இது ஓர் நவீனக் கல்யாணம்
இங்கு ஓமம் வளர்ப்பதில்லை
ஐயருக்கு இங்கேதும் வேலை இல்லை
மாப்பிள்ளை இல்லாமல் தாலி கட்டாமல்
தடல்புடலாய் நடக்கும் நவீனக் கல்யாணம்
சுருள் கேசத்துடன் சுத்தமான கோட் சூட்டுடனே
அமைதியாய் வீற்றிருந்த அவனின் அலங்காரப் போட்டோவிற்கு
நாணத்துடன் தலை குனிந்து
பக்குவமாய் மலர்மாலை தனை சூட்டிவிட்டாள் சரசு
மாமியவள் தன் கையாலே மோதிரத்தை
ஆசையுடன் பக்குவமாய் அவளின் விரலினிலே மாட்டிவிட்டாள்
நவீனக் கல்யாணம் நலமே நிறைவேற
எல்லோரும் மகிழ்ச்சியிலே திளைத்திருந்தார்
ஏயன்சிக்காற ஏகாம்பரத்திட்டை காசு கட்டி
கையைப்பிடித்து காலைப்பிடித்து கடைசியில்
கட்டுநாயக்காவிற்குப் போய் சரசுவை
ஒரு மாதிரியாய் பிளைட்டினிலே ஏற்றிவிட்டு
அப்பாடி என்று பெருமூச்சு விட்ட சுப்பர்
அமைதியான மனத்துடனே வீடு திரும்பிவிட்டார்
மொஸ்கோவில் மூன்று மாதம் நின்று
மொடேண் கேள் ஆய் மாறிய சரசு
திடீரென ஒரு நாள் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியபடி
வீட்டு வாசலிலே வந்திறங்க
சுப்பற்றை நெஞ்சம் சுக்கு நூறாக சிதைந்தே போயிற்று
அக்கம் பக்கத்தார் துக்கம் விசாரிக்க
அழுகையை அடக்கமுடியாமல் சுப்பர்
ஓய்ந்து ஒடுங்கிவிட்டார்
இரண்டு வருடங்கள் உருண்டே போயிற்று
சுப்பண்ணை அங்கை ஓடி இங்கை ஓடி
அவனைப் பிடித்து இவனைப் பிடித்து ஒருவாறு
சரசுவை லண்டனிலே கால் பதிக்க வைத்து விட்டார்
சரசு எயாப்போட்டில் வந்திறங்கி
தன் அன்பிற்குரியவரை எதிர்பார்த்து நிற்கையிலே
எங்குமே அவனைக் காணவில்லை
அங்கே பார்த்தாள் இங்கே பார்த்தாள்
சுற்று முற்றும் சுழன்று சுழன்று பார்த்தாள்
அந்த அழகான சுருண்ட கேசத்துக்குரியவனை
எங்குமே காணவில்லை
ஏக்கத்துடன் மனமுடைந்து திரும்புகையில்
கலோ என்ற குரல் கேட்டு திகைப்புற்றாள்
சுருண்ட கேசத்தை எங்கோ தொலைத்திட்ட சுப்பர் மாப்பிள்ளை
பாலைவனமான வழுக்கல் தலையுடனே நின்றிருக்க
சரசுவின் நெஞ்சம் தவியாய்த் தவித்து
கொண்ட கனவெல்லாம் கொட்டுண்டு போக
உம் என்ற முகத்துடனே அவனோடு
வீடு நோக்கிப் புறப்பட்டாள்
கடிதத்தின் வரவிற்காய் காத்திருந்த சுப்பண்ணை
காலையில் வந்திருந்த கடிதத்தை
பிரித்துப் பார்த்ததுமே மூர்ச்சித்து விழுந்திட்டார்
அவள் அப்பா பார்த்த கங்காதரன் தலை
அங்கே மாறி இருப்பதனால்
நீளத் தலைமுடியும் நீலக்கல்லில்
கடுக்கனும் போட்டிருக்கும்
நிதர்சனைக் கைப்பிடித்து
கல்யாணமும் செய்துவிட்டாள் சரசு
மூர்ச்சித்து விழுந்த சுப்பண்ணை
மூச்சுவிட மறந்துவிட்டார்.
No comments:
Post a Comment