Friday, May 27, 2011

முள்ளால் தைத்த நினைவுகளுடன்.....

முள்ளால் தைத்த
முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்
கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள்
கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா
என்றவொரு ஏக்கம்
இன்றும் என் மனதில்
தவியாய் தவிக்கிறது

எம் உறவுகளின்
சாம்பல் மேடுகளில்
பட்டு வரும் காற்றை
சுவாசிக்கும் கொடுமை
அழுகுரல்கள் நிறைந்த
அந்த அவல ஓசையின்
எதிரொலிகளை
கேட்கின்ற சுமைகள்

அரச பயங்கரவாதம்
எம்மவர் சதை தின்று
நரபலி எடுத்த நினைவுகள்

பசியால் துடிதுடித்தே
இறந்து போன சொந்தங்கள்
உடல் உபாதையினால்
உயிர்விட்ட எம் உறவுகள்
நோயின் உச்சத்தில்
ஆஸ்பத்திரியில் அடைக்கலம்
புகுந்தோரையும்
குண்டிவீசிக் கொன்ற கொடுமை

எல்லாமே வெறும் கனவாக
இருந்துவிடக் கூடாதா???
ஒவ்வோர் விடியலிலும்
என்னை நானே கேட்கும்
கேள்வி இது!!

குரும்பையூர் பொன் சிவராசா
ponnsivraj@hotmail.ccom

Tuesday, May 17, 2011

இன்றைய காதல்

கண்ணும் கண்ணும் பேசியது

அன்றைய காதலிலே

கண நேர சந்திப்பிலும்

காவியம் பேசியது பார்வைகள்,

கை அசைவுகள் ஒவ்வொன்றும்

படித்தன ஆயிரம் கவிதைகள்

ஒவ்வோர் புன் சிரிப்பும்

கொடுத்தன பல நூறு முத்தங்கள்

சந்திப்புகள் ஒவ்வொன்றும்

சரித்திரமாய் முத்திரை பதித்தன

பட்டும் படாமலும்

பயணிக்க நேரும் தருணங்கள்

ஒவ்வொன்றும் ஒவ்வோர் தேநிலவாகின

உயிரும் உயிர்ப்பும்

இருந்தது அக் காதலிலே

காலம் காலமாய் காதல் கதை பேசி

களவு களவாய் சந்தித்து

கவிதைகள் பலவும் பரிமாறி

தொடர்ந்தது அக் காதல்.....



இன்றோ

பேஸ்புக்கிலும் செல் போனிலும்

மின் அஞ்சலிலும்

பிறக்கிறது காதல்



இரண்டே நாளில் இரவிரவாய் விழித்திருந்து

கதை எல்லாம் முடிகிறது இன்ர நெற்றில்

நிமிடத்தில் பார்த்து

நியமென்று நம்பிடுவார்

வெப் கமராவில்

இங்கே அன்புக்கு இடமில்லை

வெறும் அறிமுகம் மட்டும்தான் கிடைக்கிறது



அன்று காதல் இல்லையேல் சாதல்

இன்றோ காதல் இல்லையேல் மீண்டும் காதல்

வெட்கம் நாணம் கோவம்

இவை எல்லாம் தொலைந்து போன

கணனிக் காதல் இது

உள்ளங்கள் பேசவேண்டும்

இதயங்கள் கலக்க வேண்டும்

இதுவே உண்மைக் காதல்

உதடுகள் பேசுவது காதல் அல்ல

உடல்கள் கலப்பதும் உண்மைக் காதல் அல்ல



அவசர உலகத்தில் பொய்தான் எல்லாமே

அதற்காக காதலுமா பலியாக வேண்டும்!

கணனியே நீ காதலுக்கு எதிரியே!!



குரும்பையூர் பொன் சிவராசா